’வி தி லீடர்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?’ - அ.மலை கிராமத்து மக்கள்..!

அண்ணாமலை எடுக்கும் புதுப்புது அவதாரங்கள், தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. மாநில மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்கு முன்பு சொந்த கிராம மக்களின் மனங்களை வென்றிருக்கிறாரா அண்ணாமலை? 

’வி தி லீடர்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?’ - அ.மலை கிராமத்து மக்கள்..!

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று அவரின் அப்பா குப்புசாமியும். அக்கா நல்லதாயும் ஆசையாக காத்திருக்க, 2019ல் காக்கிச்சட்டையை உதறிவிட்டு சொந்த கிராமமான தொட்டம்பட்டிக்கு வந்த அண்ணாமலை, தனது தோட்டத்தில் 50 ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.

தோட்டத்தில் இருந்துகொண்டே வி தி வீடர்ஸ் என்கிற அமைப்பை தொடங்கி கரூர், அரவக்குறிச்சி, வெள்ளக்கோயில், புகலூர், பரமத்தி வேலூர் பகுதி விவசாயிகளை ஒன்றிணைத்து பசுமை விவசாயப் புரட்சி செய்ய ஆரம்பித்தார். ஐ.பி.எஸ். வேலையை விட்டுவிட்டு ஆடு மேய்க்க வந்துவிட்டாரே என்று ஊர் மக்களே அவரைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஆறு மாதங்களுக்குள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தன்னை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டார்.

விவரம் தெரிந்தவர்களோ, ஏதோ கணக்கோடுதான் அண்ணாமலை வேலையை உதறிவிட்டு வந்திருக்கிறார் என நினைத்த நேரத்திலேயே பா.ஜ.க துணைத்தலைவர் பதவியும், அடுத்து தமிழக தலைவர் பதவியும் அவரை தேடி. வந்தது. 2021 தேர்தலில் சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கினார். ’வி தி லீடர்ஸ்' அமைப்பில் தன்னார்வலர்களாக இருந்த சுமார் ஆயிரம் இளைஞர்களும் வெளிநாட்டில் இருந்த அவரின் ஆதரவாளர்களும் அரவக்குறிச்சி தொகுதிக்கு வந்து அண்ணாமலைக்காக வேலை பார்த்தார்கள். ஆனால், பாஜக மீதான எதிர்ப்பால் பள்ளபட்டி நகராட்சியில் 25 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் அண்ணாமலைக்கு எதிராக வாக்களிக்க, 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அங்கேயும் தோல்விதான் கிடைத்தது. இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் விரக்தியில் இருந்த அண்ணாமலையிடமிருந்து மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு முக்கியத்துவம் வழங்காதது, அவர் எதிர்பார்த்த தொகுதி ஒதுக்காதது ஆகியவற்றால் மனம் வெறுத்த அண்ணாமலை, பா.ஜ.க.வில் இருந்து இப்போது விலகியிருக்கிறார். தனது ’வி தி வீடர்ஸ்' அமைப்பை தூசி தட்டியெடுத்த அவர் அதை அரசியல் இயக்கமாக மாற்றினார். அவர் அழைப்பு விடுத்த முதல் நாளிலே எட்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்.

தற்போதுவரை சுமார் 18 லட்சம் பேர் அந்த இயக்கத்தில் இணைந்துள்ள நிலையில், அண்ணாமலையின் சொந்த கிராமத்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க தொட்டம்பட்டிக்கு சென்றோம். கிராமமே வெறிச்சோடி கிடந்தது. அங்கிருந்த அரசு ஆரம்ப துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தார்கள். ஊர் மரத்தடியில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். மேற்குத் தெருவில் இருக்கும் அண்ணாமலையின் வீடு பூட்டப்பட்டிருந்தது. திண்ணையின் தாழ்வாரத்தில் மோடியுடன் அண்ணாமலை இருக்கும் காலண்டர் மாட்டப்பட்டிருந்தது. 'அண்ணா மலையின் அப்பாவும், அம்மாவும் வெளியூர் சென்றுவிட்டார்கள் என்று பக்கத்து வீட்டுக்காரர் தகவல் சொன்னார்.

அப்போது நம் எதிரே வந்த பழனிச்சாமி. 'எங்க ஊர் தம்பி இயக்கம் ஆரம்பிச்சது எங்களுக்கு பெருமை அவர் சின்னப்பையனாக இருக்கும்போதே துறுதுறுன்னு இருப்பார். எனக்கும் அண்ணாமலைக்கும் மாமன் மச்சான் உறவு. அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜக தமிழகத்தில் மிகவும் எழுச்சியாக இருந்தது அவரிடமிருந்து பதவியை பறித்த பிறகு அக்கட்சி கரைந்துபோய்க்கொண்டிருக்கிறது. அண்ணாமலை புதிதாக கட்சி ஆரம்பித்த அன்றே எட்டு லட்சம் பேர் சேர்த்துள்ளனர். இதற்கு அண்ணாமலை மீது இளைஞர்களுக்கு உள்ள நம்பிக்கைதான் காரணம் இன்னும் செல்லச் செல்ல கோடியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பாஜகவை பிடிக்காதவர்கள்கூட இப்போது அவரை அதிகமாக ஆதரிக்கிறார்கள்.

2021 தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வென்றது. காரணம். எடப்பாடி என்கிற தனி மனிதனுக்காகவும் அவர் முதலமைச்சராகவும் ஆக வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகதான் ஆதரித்தார்கள். அதேபோலதான் அண்ணாமலை என்கிற தனி மனிதனுக்காக இந்த கொங்கு ஏரியாவில் கட்சி பேதம் பார்க்காமல் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு எதிராக அரசியல் செய்பவர் அண்ணாமலை. இப்போதைய அரசியல் சூழலில், முதல்வர் விஜய்யை எதிர்த்து நின்று அரசியல் செய்யக்கூடிய ஒரே ஆள் அண்ணாமலை மட்டுமே அதை அவர் சரியாக செய்தால் நிச்சயம் எங்கள் ஊரில் அவர் ஆரம்பித்த இயக்கம் தமிழகம் முழுவதும் வலுப்பெறும்” என்றார்.

அவசரமாக போய்க்கொண்டிருந்த அங்கமுத்து என்பவரை மடக்கினோம் 'இப்பதானே ஆரம்பிச்சிருக்காரு போகப் போகத்தானே அது எப்படி இருக்குன்னு தெரியும்' என்றார். மற்றொரு ஊர்க்காரரான செல்லமுத்து "அவருக்கென்று தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள்தான் தற்போது கட்சியில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அரசு ஏதாவது ஊழல் செய்தால் அதுகுறித்து டேட்டா சேகரித்து வெளியிடும் திறமை அண்ணாமலைக்கு மட்டுமே இருக்கிறது' என்றார்.

பாவாயி அம்மாள் என்பவரோ, அண்ணாமல எனக்கு சொந்தக்கார பையன் தான். அவர் எப்போ பாத்தாலும் கும்புடு போட்டுக்கிட்டே இருக்கார். அரசியலில் ஜெயிக்க அதுமட்டும் போதுமா? இந்த விசய் ஆட்சிய புடிச்ச மாதிரி அண்ணாமலைக்கும் ஆட்சிய புடிக்க ஆச விஜய் ஓட்டுக்கு காசே குடுக்கல ஆனாலும் அவரு ஜெயிச்சுட்டாரு அண்ணாமலை என்ன ஆவார்னு போகப் போக பாப்போம்' என்றார்.

நாமும் காத்திருப்போம்.

- அரவிந்த்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow