பொதுச் செயலாளராகும் வேலுமணி? ரீ-எண்ட்ரி கொடுக்கும் சசி?சிவிஎஸ் வீட்டில் ரகசிய மீட்டிங்..!
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் விழுப்புரம் இல்லத்தில் நடந்த ரகசிய மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலோசனையில், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது, தற்போதைய தலைமையை மாற்றுவது உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி தலைமையில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 30 எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ள அதிருப்தி தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. அந்த முயற்சி வெற்றி பெற்றால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நேரடி சவால் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிளவு திடீரென உருவானது அல்ல. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு தலைமைதான் காரணம் என்றும், பொதுக்குழுவை கூட்டி கட்சியின் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சண்முகம் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.பி. வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருப்பது உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோர் தலைமையிலான அதிருப்தி அணியின் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதன் பின்னணியில், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலுக்குப் பிறகு சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு முன்பாக வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கே சவால் விடுக்கும் வகையில் மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான பெயரும் அடிபடுகிறது... அது சசிகலா!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, ஓ.பன்னீர்செல்வத்தின் கிளர்ச்சி, பொதுக்குழு தீர்மானங்கள் என அதிமுக பல்வேறு பிளவுகளை சந்தித்தது. 2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, சசிகலாவின் தலைமையை மீட்டெடுக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன. சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான சட்டப் போராட்டங்களும் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
இப்போது மீண்டும் அதிமுகவுக்குள் தலைமை மாற்றம் குறித்த பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், அவைத்தலைவராக சசிகலா, பொதுச் செயலாளர் ஆக வேலுமணி பொருளாளராக சண்முகம் என தேர்வு செய்ய 30 எம்எல்ஏக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படி இவர்கள் பிளான் செய்வது ஒர்க்கவுட் ஆனால் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்து விடும்.
இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக, சிவிஎஸ் இல்லத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த ரகசிய ஆலோசனை உண்மையிலேயே புதிய அணிக்கான அடித்தளமா? வேலுமணி தலைமையில் பொதுக்குழு கூடுமா? சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் முக்கிய பங்குடன் வருகிறாரா? அல்லது எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியாளர்களை கட்சிக்குள் இருந்தே கட்டுப்படுத்திவிடுவாரா?
அதிமுகவின் அடுத்த சில நாட்கள், தமிழக அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளுக்கு களம் அமைக்கக்கூடும்.
What's Your Reaction?