கள்ளழகர் மீது பிரசர் பம்ப் தண்ணீர்... எல்லோருக்கும் பாதிப்பு.. நீதிபதி சொன்னது என்ன?

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க பக்தர்கள் பயன்படுத்தும் உத்திகளை முறைபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது

Mar 28, 2024 - 16:54
கள்ளழகர் மீது பிரசர் பம்ப் தண்ணீர்... எல்லோருக்கும் பாதிப்பு.. நீதிபதி சொன்னது என்ன?

அழகர் திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க பக்தர்கள் பயன்படுத்தும் உத்திகளை முறைபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தமனுவில், உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் அணிவிக்கபபட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும்.. மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடைக்க தடை விதிக்கவேண்டும் என மனுவில் கூறப்படிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, முன்பு இயற்கையான முறையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தற்போது அதிக விசையுடன்கூடிய பம்புகளை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர், திருவிழாவில் பெண்கள், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

இந்த வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு வரும் செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow