பட்டா வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு.. அந்தியூரில் வட்டாட்சியரிடம் கதறி அழுத பெண்கள்
அந்தியூர் அருகே வட்டாட்சியரிடம் பெண்கள் பட்டா கேட்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 44 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தடையில்லா சான்று வழங்கப்பட்ட நிலையிலும், பட்டா வழங்காமல் 20 ஆண்டுகளுக்கும் மேலா வருவாய்த்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அம்மாபேட்டை காவல்துறையினர், அந்தியூர் வட்டாட்சியர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது வட்டாட்சியரிடம் பெண்கள் பட்டா கேட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
What's Your Reaction?