‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!

கொங்கு மண்டல தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவில் ஆண்களே கோலோச்சி வரும் நிலையில், கனிமொழியை களமிறக்கிவிடுவது அல்லது துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை களமிறக்குவது தான் கொங்கு மண்டலத்தில் தி.மு.கவை வலுப்பெறச் செய்யும் என்பது தி.மு.கவினரின் விருப்பமாக இருக்கிறது.

Apr 1, 2025 - 18:20
Apr 1, 2025 - 18:24
‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!
DMK - MK stalin

கட்சிக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, கூட்டணிக்கான காய்களை நகர்த்துவது என 2026 தேர்தல் காய்ச்சல் இப்போதே அரசியல் கட்சிகளை வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, ‘200 தொகுதிகளை வெல்வோம்’ என தி.மு.க. தலைமை சூளுரைத்து வந்த நிலையில், ‘கொங்கு மண்டலத்தில் நமக்கு சாதகமான சூழல் இல்லை. கவனம் செலுத்தாவிட்டால் 2026-ல் ஆட்சி கை கூடுவது கடினம் தான்’ என வந்திருக்கும் சர்வே ரிப்போர்ட் அறிவாலயத்தை ஹை ஃபீவரில் நடுங்க வைத்திருக்கிறதாம்.

தொடர்ந்து பின்னடைவைக் கொடுத்து வரும் கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த, தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் முக்கிய நபரையே நேரடியாகக் களமிறக்கினால் என்ன? என அறிவாலயம் ஆலோசித்து வருவது தான் உடன்பிறப்புகளிடையே ஹாட் டாப்பிக் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடக்கம் முதலே சறுக்கல்!

1957-ல் தி.மு.க. களம் கண்ட முதல் தேர்தலில் இருந்தே கொங்கு மண்டலம் தி.மு.கவுக்கு சோதனையாகவே இருந்து வருகிறது. 1957 தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் களம் இறங்க, கொங்கு மண்டலத்தில் தி.மு.கவுக்கு பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களே இல்லை. 1967-ல் ஆட்சியைப் பிடித்து தற்போது ஆறாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது தி.மு.க. இப்போதும் ஒரு டஜன் கட்சிகளோடு கூட்டணி வைத்து இறங்கினால் கூட, கொங்கு மண்டலத்தில் வலுவான ஒரு வெற்றியைப் பெற முடியாத நிலையில் தான் தி.மு.க. இருக்கிறது.

அதேவேளையில், எம்.ஜி.ஆர் காலம்தொட்டு ஜெயலலிதா, எடப்பாடி என தற்போதுவரை கொங்கு மண்டலம் அ.தி.மு.கவின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்து வருகிறது. 1989-ல் அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து ஜெ – ஜா அணிகளாக போட்டியிட்டபோது, ஜெயலலிதா பெற்ற 27 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்களைக் கொடுத்தது கொங்கு மண்டலம் தான்.

கொங்குப் பகுதியில் இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்காளர்கள் அதிகம்.  சிறுபான்மையினர் வாக்குகள் மிகவும் குறைவாக இருக்கும் பகுதியும் கூட. இதுமட்டுமில்லாமல், கொங்கு மண்டலத்தில் கணிசமாக இருக்கும் அருந்ததிய சமுதாயத்தினரின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.கவுக்கு என நிரந்தரமாக விழுந்து வருகிறது. இதெல்லாம் போக இந்தப் பகுதிக்கென எந்தவொரு சிறப்புக் கவனத்தையும் செலுத்தாதது தான் கொங்கில் தி.மு.கவை எழுச்சி பெற முடியாமல் வைத்திருக்கிறது.

கோலோச்சும் அ.தி.மு.க.!

மேற்கு மாவட்டங்களான கோவை (10 தொகுதிகள்), நீலகிரி (3 தொகுதிகள்), திருப்பூர் (8 தொகுதிகள்), ஈரோடு (8 தொகுதிகள்), நாமக்கல் (6 தொகுதிகள்), சேலம் (11 தொகுதிகள்), தருமபுரி (5 தொகுதிகள்), கிருஷ்ணகிரி (6 தொகுதிகள்) மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் என மொத்தம் 62 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளைத் தான் கொங்கு மண்டலம் என்கின்றனர்.

இங்கு 2011 சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளையும், 2016 தேர்தலில் 48 தொகுதிகளையும் அ.தி.மு.க. பிடித்ததால் தான் தொடர்ந்து இருமுறை ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வர முடிந்தது. 2016 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.கவுக்கு வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இன்னும் கூடுதலாக சில தொகுதிகளில் வென்றிருந்தால் 2016-லேயே தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கும்.

2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் கூட, கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 62 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. ஆனால், அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் தர்மபுரி, சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளை வென்றிருக்க முடியாது என்பது தி.மு.கவுக்கு ஷாக்கைக் கொடுத்தது. மேலும், தற்போதைய நிலவரப்படியும் கொங்கு பெல்ட்டில் அ.தி.மு.கவுக்கு ஆதரவான மனநிலை மாறாமல் இருப்பதும், நாம் தமிழரும், த.வெ.கவும் கணிசமான வாக்குகளைப் பிரித்து சேதாரத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது தி.மு.க. தலைமையின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

சர்வே கொடுத்த ஷாக் ரிசல்ட்!

இப்படியான நிலையில் தான் கொங்கு மண்டலத்தின் கள நிலவரம் அறியும் வகையில் ஆழமான சர்வே ஒன்றை அறிவாலயம் எடுத்திருக்கிறது. அதில் வந்திருக்கும் ரிசல்ட் அறிவாலயத் தலைமையை அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.

சர்வே குறித்து விஷயமறிந்த தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். “எடப்பாடி ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்தது, மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை அமைத்தது போன்றவை அ.தி.மு.கவுக்கு கூடுதல் பலமாக மாறியிருப்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. அதேவேளையில், கொங்கு மண்டலத்திற்கென பிரத்யேக கவனமெடுத்து பெயர் சொல்லும் அளவிலான திட்டத்தை கொண்டுவராதது தி.மு.க-வுக்கு மைனஸாக இருக்கிறது.

கொங்கு மண்டலத்திலுள்ள கொங்கு வேளாளர் சமுதாயத்தின் 20 சதவிகித வாக்குகளும், அருந்ததிய சமுதாயத்தினரின் 10 சதவிகித வாக்குகளும், மற்ற சமூகத்தினரின் வாக்குகள் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் வரை அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே இருக்கின்றன.

இதுபோக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவுக்கென இருக்கும் அடிப்படை செல்வாக்கு, கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடியின் தலைமை, மற்றும் கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் தி.மு.க. ஓட்டுகளுக்கு நா.த.கவும், த.வெ.கவும் வேட்டு வைப்பதும் தெரிகிறது. மேலும், 2026 தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. மறுபடியும் கரம்கோர்க்கும் பட்சத்தில், 2021-ல் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. சந்தித்ததை விட கடும் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் சூழல் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது” என்றனர்.

ஏகப்பட்ட கோஷ்டிகள்- என்னவாகும் ரிசல்ட்?

தொடர்ந்து பேசியவர்கள், “சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தி.மு.கவுக்கு வலிமையான தளபதிகள் இருப்பது போன்று, கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தளபதிகள் இல்லை. கரூர் செந்தில்பாலாஜியை வைத்து தான் கோவை மாநகராட்சியையே பிடிக்க முடிந்தது. மேலும், பல மாவட்டங்களில் தி.மு.க. – அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலரும் சாதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் கரம் கோர்த்துக்கொண்டு செயல்பட்டும் வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் முத்துசாமி டீம், ஈரோடு எம்.பி பிரகாஷ் டீம், என்.கே.கே.பி.ராஜா டீம், வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் டீம் என ஏகப்பட்ட கோஷ்டிகள் பாலிடிக்ஸ் செய்து வருகின்றனர். போதாக்குறைக்கு அ.தி.மு.கவிலிருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்திருப்பது என மாவட்டத்தில் உட்கட்சி பிரச்னைகள் அனலாகத் தகிக்கிறது.

அதேபோல, தே.மு.தி.கவிலிருந்து வந்து சில வருடத்திலேயே திருப்பூர் தி.மு.க. மேயர் ஆனதோடு, தற்சமயம் மாவட்டப் பொறுப்பாளராகி இருக்கும் தினேஷூக்கும் கடும் எதிர்ப்புகள் நிலவுகிறது. அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் ஒருவருக்கொருவர் முகம் பார்க்காமல் முறுக்கிக் கொண்டு வருவது திருப்பூரில் தி.மு.கவை ஏகத்துக்கும் பதம் பார்க்கக் காத்திருக்கிறது.

வன்னியர் வாக்குகளை குறிவைத்தும், சேலத்தை வலுப்படுத்தவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏவான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதும், அம்மாவட்ட உடன்பிறப்புகளிடம் புகைச்சலைத் தான் கிளப்பியிருக்கிறது. ராஜேந்திரன் டீம், எம்.பி செல்வகணபதி டீம், சிவலிங்கம் டீம் என தனித்தனி ரூட்டில் மோதிக்கொண்டு கட்சியை சின்னாபின்னமாக்கக் காத்திருக்கின்றனர்.

புகாருக்குள்ளாகி நாமக்கல், தருமபுரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டாலும், உட்கட்சிப் பிரச்னை ஏகத்துக்கும் புரையோடிக் கிடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்யாமல் கொங்கில் தி.மு.க. கரையேறுவது கடினம் என சர்வே முடிகள் அறிவாலயத்திற்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது” என்றனர்.

வலுவான தளபதிகள் இல்லை-யாரை இறக்கலாம்?

சீனியர் தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி, சேலம் செல்வகணபதி, தர்மபுரி பழனியப்பன் என கொங்கு மண்டல தி.மு.கவில் கோலோச்சுபவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.கவில் இருந்து வந்தவர்கள் தான். இது பாரம்பரியமான தி.மு.கவினரை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. அதேபோல, கொங்கு மண்டலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருக்குப் பிறகு தி.மு.கவிலும் வலுவான தலைவர்கள் உருவாகவில்லை. இதனால் தான் கொங்கில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தி.மு.க. திணறி வருகிறது.

தற்போதைய நிலையில் கொங்கு மண்டலத்திற்கு ஈரோடு முத்துசாமி, சேலம் ராஜேந்திரன், திருப்பூர் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் என நான்கு அமைச்சர்கள் இருந்தாலும், பெயர் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் தடாலடியான செயல்பாடுகள் இல்லை. செந்தில்பாலாஜி என்கிற ஒரே தளபதியை மட்டும் தான் கொங்கு மண்டலத்துக்கான சக்தியாக தலைமை நினைக்கிறது. ஆனால், வழக்குகள் நெருக்கடியக்க டெல்லியின் கோபத்திற்கு எந்நேரமும் செந்தில்பாலாஜி சிக்கலாம்.

எனவே, கொங்கு மண்டத்தில் இருக்கும் உட்கட்சி பூசல்களைச் சரிசெய்யவும், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று ஏற்பாடாக தலைமையில் இருந்து ஒருவரை கொங்கு மண்டலத் தளபதியாய் களமிறக்க வேண்டுமென நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

கனிமொழியா, உதயநிதியா?

அந்தவகையில், கொங்கு மண்டல தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவில் ஆண்களே கோலோச்சி வரும் நிலையில், கலைஞரின் மகளான கனிமொழியை களமிறக்கிவிடுவது அல்லது துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை களமிறக்குவது தான் கொங்கு மண்டலத்தில் தி.மு.கவை வலுப்பெறச் செய்யும் என்பது தி.மு.கவினரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி நடந்தால் அது கொங்கு மாவட்டங்களில் ஒரு வீச்சினை ஏற்படுத்தும்.

குறிப்பாக, கனிமொழி பெண் ஆளுமை என்பதால் சமூக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் ஆதரவு வாக்குகள் பெருகும் என உள்ளூர் தி.மு.கவினர் கணக்கு போடுகின்றனர். மேலும், தொழில் பகுதியான கொங்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சிக்கு டெல்லி லாபி தேவை. கனிமொழி அதற்கு பாலமாக இருந்து செயல்படுவார் என கொங்கு உடன்பிறப்புகள் நினைக்கின்றனர். அதேவேளையில் உதயநிதியை களமிறக்கினாலும் கொங்கு பகுதியில் தி.மு.க. வேரூன்றுவதற்கான சூழல் பிரகாசமாக இருக்கும்.

ஆனால், சென்னையில் அலுவல் ரீதியான பணிகளைக் கவனிக்கவும், சென்னையில் போட்டியிடுவதாலும் உதயநிதி கோட்டையில் இருப்பதே சரியாக இருக்கும் என தலைமை நினைக்கிறது. அதேவேளையில், கொங்கு மண்டலத் தளபதியாக கனிமொழியை இறக்கிவிட்டு, அவரை பின்னிருந்து இயக்க முதல்வர் குடும்பத்தின் முக்கிய நபர் நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

2021 தேர்தலில் கொங்கு மண்டலம் பின்னடைவைக் கொடுத்ததையும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமைந்திருந்தால் கொங்கு பகுதியில் 6 தொகுதிகள் வரை இழந்திருக்கக்கூடும் என்பதையும், 2026 தேர்தலில் பலமுனை போட்டிகள் நிலவினால் கொங்கில் இன்னும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதையும் தி.மு.க. தலைமை கவனத்தில் கொண்டு, தவறுகளை எல்லாம் சரிசெய்ய வேண்டும். ‘200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்’ என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்திருக்கும் இலக்கை அடைய வேண்டுமெனில் கொங்கு மண்டல தி.மு.கவில் நிலவும் குளறுபடிகள் சரிசெயப்படுவதோடு, கொங்கில் தி.மு.கவை வலுப்படுத்த சிறந்ததொரு மாலுமியை நியமிப்பதும் அவசியம் என்பதையும் உணர வேண்டும். ஏனென்றால் மாலுமி இல்லாத கப்பல் கரையேறாது!

கொங்கு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியூட்ட ஸ்டாலின் புதிய தளபதியை களம் இறக்கப் போகிறாரா? அல்லது லோக்கல் தளபதிகளை வைத்தே களமாடப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(கட்டுரை: நவீன் இளங்கோவன், பாபு)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow