ஐபிஎல் போட்டி: 38 செல்போன்களை திருடிய கும்பல்.. 3 நாட்களில் சிக்கியது எப்படி?
ஐபிஎல் ரசிகர்களை குறிவைத்து செல்போன் திருடும் வட மாநில கும்பலை 3 நாட்களில் கைது செய்துள்ளது சென்னை காவல்துறை. இந்த கும்பல் பிடிப்பட்டது குறித்து எப்படி என காண்போம் இந்த செய்தி தொகுப்பில்..

நாடு முழுவதும் ஐபிஎல் என்ற காய்ச்சல் பரவி கொண்டிருக்கிறது. எங்கும் எதிலும் ஐபிஎல் குறித்து தான் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. மாநிலத்தில் எங்கெல்லாம் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆடும் போட்டிகளை பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ரசிகர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு கும்பல் ஒன்று தங்களின் கைவரிசையை காட்டி உள்ளது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஒன்று கூடினர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அடையாளம் தெரியாத சிலர் அன்று ஒரே நாளில் மைதானத்திற்குள் 38 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் ஆகியவற்றை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போனை பறிகொடுத்தவர்கள் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் குவிய, விசாரணையில் குதித்தது காவல்துறை. அப்போதுதான் வடமாநில கும்பல் ஒன்று இதே வேலையாக சுற்றித்திரிவது தெரிந்து காவல்துறை கிறுகிறுத்து போயுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தங்கி இருக்கும் இந்த கும்பல், கிரிக்கெட் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்து ரூம் போட்டு தங்குமாம். பின்னர் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி விடுவார்களாம், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். கிரிக்கெட் மைதானத்தின் Enrty-யில் தொடங்கும் இவர்களின் செல்போன் வேட்டை, போட்டி முடிந்து Exit ஆகும் ரசிகர்கள் வரை முடிந்த அளவுக்கு செல்போன்களை திருடிவிட்டு இரவோடு இரவாக தங்களின் வசிப்பிடம் நோக்கி சிட்டாக பறந்துவிடுமாம் இந்த கும்பல்.
சிறுவர் உட்பட 8 பேர் கைது:
என்ன தான் மாவட்டம் விட்டு மாவட்டம் தப்பிப்போனாலும், சும்மா விடுமா நம் காவல்துறை? செல்போன்களை திருடிக் கொண்டு சென்ற கும்பலை பிடிக்க வேலூர் சென்றது ஒரு தனிப்படை. அங்கு வைத்து ராஜ்குமார் நொய்யா, விஷால் குமார் மொஹோத்,கோபிந்குமார், ஆகாஷ் நொனியா, மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் என 8 பேரை கைது செய்தது காவல்துறை. சென்னைக்கு அழைத்து வந்து காவல்துறை தனிப்படை இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கு ஐபிஎல் போட்டி நடந்தாலும் அங்கு செல்போன் திருட சென்று விடுவார்களாம். இப்படி இவர்கள் திருடிய செல்போன்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஆயிரம் இருக்குமாம். ரசிகர்கள் தங்களின் செல்போன்களை கவனக்குறைவாக வைத்து இருப்பதை தெரிந்தே திருட்டு கும்பல் சுலபமாக கைவரிசை காட்டி உள்ளது. அதனால் ரசிகர்கள் கவனமாக தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்" என்று திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்கள் சிறுவர்களுக்கு செல்போன் திருட பயிற்சி கொடுத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. திருடிய செல்போன்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று விற்று சரி பாதியாக பணத்தை பிரித்துக் கொள்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் வழக்குகள் ஏதேனும் உள்ளதா? எத்தனை முறை சென்னைக்கு வந்து கைவரிசை காட்டியுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: ‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!
What's Your Reaction?






