ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை... உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வில், உடற்கூறாய்வு அறிக்கையின் பகீர் தகவலில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அது என்ன பகீர் தகவல்? செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

Oct 11, 2024 - 08:09
ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை... உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது

கஷ்டப்பட்டு சடலத்தை தூக்கிச் செல்லும் சி.ஐ.எஸ்.எப் வீரர்களான இவர்கள் தான், அந்த நபரையே கொலை செய்ததாக 4 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் ஒன்று, மண்மேட்டில் கடந்த நான்கு மாதம் முன்பு இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கூறி அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அதனை அப்புறப்படுத்தி, சாலையில் எடுத்துவந்து போட்டனர்.

நெய்வேலி தெர்மல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாகக் கிடந்தவர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பதும், உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றி  உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சிவசங்கரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உடற்கூறாய்வின் முடிவில், ஷூ காலால் பலமாகத் தாக்கப்பட்டதில், மதுபோதையில் இருந்த சிவசங்கரன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இதனை வைத்து போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சிவசங்கரனின் சடலத்தை சுமந்து வந்த என்.எல்.சி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்களான அனுஜ், அங்கித் சிங் ஆகிய இருவரும்தான், மதுபோதையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு வந்ததாகக் கூறி சிவசங்கரனை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிஅம்ன்ற நீதிபதி பிரவீன்குமார் குமார் முன் ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின் பேரில், 15 நாட்கள் நீதிமன்ற காவலில்  சிறையில் அடைத்தனர்.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், ஷூ காலால் மிதித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow