தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்
தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் - தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
அத்துடன் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பொதுமக்கள் சென்றதால் மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜையை பண்டிகையை ஒட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் நீண்ட நேரம் காத்திருந்தே பயணிகள் பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
இதேபோல், பூந்தமல்லியில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். கூட்டம் நிரம்பி வழிந்த சூழலில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். அப்போது 'அடுத்த பேருந்துக்காக காத்திருக்காமல் வரும் பேருந்துகளில் ஏறிச் செல்லுமாறு' போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
What's Your Reaction?