ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மீண்டும் சோதனை.... திமுக அரசுக்கு சிக்கலா...?

தலைமை அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Mar 21, 2024 - 09:34
Mar 21, 2024 - 15:39
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மீண்டும் சோதனை.... திமுக அரசுக்கு சிக்கலா...?

திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு புகார்கள் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது என்றால், இந்தமுறை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாவது ஜி ஸ்கொயர் நிறுவனத்தால் தான்.

2021 ஆம் ஆண்டு திமுக அட்சிக்கு வரும் வரை சத்தமில்லாமல் இருந்த ஜி ஸ்கொயர் நிறுவனம், அதன் பிறகு அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்பதே சர்ச்சைக்கு முக்கிய காரணம். 

ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்தவரை அப்ரூவல் என்பது மிகவும் முக்கியம்.. குறிப்பாக, டிடிசிபி அனுமதி பெற்றால் மட்டுமே கட்டடங்கள் கட்டி விற்க முடியும். இந்த அப்ரூவல் விவகாரத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ஒரு நீதி, பிற நிறுவனங்களுக்கு ஒரு நீதி என்பதாக ஊருக்குள் பேச்சு. அனுமதிக்காகக் காத்திருக்கும் நிறுவனங்களிடம் பேரம் பேசுவது, பேரத்துக்குப் பணியாதவர்களுக்கு அப்ரூவல் தாமதமாக்குவது என புகார்கள் எழ, இவை அனைத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தான் முக்கிய காரணம் என்றும், ஒரு முக்கியப்புள்ளியின் பெயரை பயன்படுத்தி தான் ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையை ஆட்டி படைக்கிறது என்பதும் பரவலாக பேசப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளாகும். 

கோவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘ஜி ஸ்கொயர் – புளூ கிரஸ்ட்’, சூலூரில் ‘ஜி ஸ்கொயர்-ஸ்பிரிங் பீல்ட்ஸ்’ என, பல ஆண்டுகளாக பழுத்த அனுபவமுள்ள நிறுவனங்களால் கூட சாதிக்க முடியாத வெற்றியை 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படுத்தியது எப்படி என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

2023-ஆம் ஆண்டு DMK Files என்று அடுத்தடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக சொத்துப் பட்டியல் கோப்புகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தோடு இணைத்து தகவல்கள் வெளியிட்டார். அன்று வெளியிட்ட பட்டியலில் `ஜி ஸ்கொயர் நிறுவனம்' பற்றிய விவரத்தில், Residential Plots - ரூ.24,006.07 கோடி, Commercial Plots - ரூ.11,714.52 கோடி, Build To Suit - ரூ.3,112.1 கோடி என ஆக மொத்தம் - ரூ.38,827.70 கோடி ஜி ஸ்கொயர் சொத்து மதிப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சொத்து பட்டியல் வெளியான சில நாட்களிலேயே `ஜி ஸ்கொயர்' நிறுவனம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.  தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த காலம் இப்படி இருக்க தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் வேலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மீண்டும் வருமான வரி சோதனை என்பது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

2019, 2023 ஆண்டுகளை தொடர்ந்து தற்போது G- square கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள G- square கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவனத்தின் உரிமையாளர் பாலாவின் வீடு, அவரின் உறவினர்கள் வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow