தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் இறுதியானது... 4,43,577 பேர் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு

2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. முன்பு இருந்த வாக்காளர்களை விட 4,43,577 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Mar 31, 2024 - 11:53
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் இறுதியானது... 4,43,577 பேர் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு

2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. முன்பு இருந்த வாக்காளர்களை விட 4,43,577 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (31-03-2024) வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். அதன் பின்னர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

அதன் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் படி, தற்போது தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட 4,43,577 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொகுதியில் 11,80,263 ஆண்களும், 12,01,427 பெண்களும், 426 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 23,82,119 பேர் வாக்களிக்கவுள்ளனர். குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 13,45,120 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,57,857 , பெண்கள் 6,87,181,  மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர்.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, இறுதி செய்யப்பட்ட வாக்காளர்  பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேலும், வாக்காளர்  பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் நகல் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow