அத்வானி வீடு தேடிச்சென்ற பாரதரத்னா!.. குடியரசுத்தலைவர் நேரில் கௌரவம்..
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு டெல்லியில் அவரது வீடு தேடிச் சென்று குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
சமூக வளர்ச்சி, சீர்திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு பாரத ரத்னா விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 5 தலைவர்களுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. அதன்படி மறைந்த முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண்சிங் மற்றும் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூர், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அத்வானி தவிர அனைவருக்கும் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து வயதுமூப்பு காரணமாக அத்வானிக்கு வீடு தேடிச் சென்று பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. அதன்படி டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்குச் சென்று குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?