ஜெய்ஸ்வால், சுப்மன் கில்லை வீழ்த்துவதே நோக்கம் - ஜோஷ் ஹேசில்வுட்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லுக்கு எதிராக வியூகங்களை வகுப்பதே தங்களது அணியின் நோக்கம் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடர் போட்டியான பார்டர் - கவாஸ்கர் டிராபி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகள் இதுவரையிலும் இரண்டு முறை நடைபெற்றுள்ளது. 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இரண்டு முறையும் இந்திய அணியே தொடர்ச்சியாக கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக இத்தொடர் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆண்டும் இத்தொடரை இந்தியா கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியிருக்கிறது. இதுவரையிலான இரண்டு தொடரிலும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரையும் கட்டுப்படுத்துவதே தங்களது இலக்காக இருக்குமென ஜோஸ் ஹேசில்வுட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்...
“இந்திய அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லுக்கு எதிராக நாங்கள் வியூகங்களை வகுக்கு வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பிற வீரர்களுக்கு நாங்கள் எதிராக பல ஆண்டுகளாக விளையாடியிருக்கிறோம். அதனால், அவர்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுடன் நாங்கள் விளையாடியதில்லை என்பதால் அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
What's Your Reaction?