பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவா? சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த விஜய் ஆண்டனி
காஷ்மீரில் நடைப்பெற்ற பயங்கரவாத சம்பவம் தொடர்பாக விஜய் ஆண்டனி பதிவிட்ட பதிவில், ”பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இது சர்ச்சை ஆன நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் விஜய் ஆண்டனி.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22 ஆம் தேதி) நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை வெளியிட்டது. SVES விசாவில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுமாறும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.SAARC விசா விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை என்றும் தெரிவித்தது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-க்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
விஜய் ஆண்டனியின் பதிவு விவரம்:
சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது போருக்கு வழி வகுக்கும் என பாகிஸ்தானிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் எப்ப வேண்டுமானாலும் நிலவக்கூடும் என்கிற பதற்றமான சூழ்நிலை நீடிக்கும் நிலையில் நேற்றைய தினம் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பான பதிவொன்றினையிட்டுருந்தார். அதில், ”காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில், பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என குறிப்பிட்டு இருந்தார். போர் வேண்டாம் என்கிற எண்ணத்துடன் விஜய் ஆண்டனி பதிவுட்டு இருந்த நிலையில், அதற்கு பலர் கமெண்டில் விஜய் ஆண்டனியின் கருத்தினை மோசமாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்தியர்கள் இறந்துள்ள நிலையில், பாகிஸ்தான் மீது கரிசனம் காட்ட வேண்டுமா? என்கிற தொனியில் பலர் கமெண்ட் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவில்,”காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
pic.twitter.com/Gne6EdT6yu — vijayantony (@vijayantony) April 28, 2025
நேற்று போர் வேண்டாம் என்கிற தொனியில் பதிவிட்டு இருந்த விஜய் ஆண்டனி, இன்று அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் எழுந்த நெருக்கடி தான் காரணமா? என்கிற கேள்வியினை நெட்டிசன் எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?






