அமமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய பாஜக... அணில் போல செயல்படுவோம் - டிடிவி தினகரன்...
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக்காக தாங்கள் அணில் போல செயல்படுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலாவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதேபோல் 5 தொகுதிகளை ஒதுக்கி தேமுதிகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீட்டை தீவிரமாக நடத்தி வருகிறது.
நேற்று (மார்ச்-19) கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கியது. ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி உடன்படிக்கை தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று (மார்ச்-20) கையெழுத்தானது.
இதையடுத்து பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பிற்பகலில் கமலாலயத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொகுதி உடன்படிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்களவைத் தேர்தலில் திமுகவின் பொய் பிரசாரங்களை வீடு வீடாக சென்று முறையிடுவோம் என்றும், பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக அணில் போல் செயல்படும் என்றும் கூறினார். தஞ்சாவூர் தான் பிறந்த மண் என்பதால் அங்கு போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளதாக கூறி டிடிவி தினகரன், அமமுக போட்டியிடும் இரண்டு தொகுதிகள் எது என்பதை பாஜக அறிவிக்கும் என்றார்.
What's Your Reaction?