நாடாளுமன்றத்தில் ஒலித்த கமலின் குரல்.. மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாநிலங்களவையில் எம்.பி-யாக பதவியேற்றுக் கொண்டார். கமலினைத் தொடர்ந்து திமுக சார்பில் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றனர்.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் திங்களன்று எம்.பி.யாக பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்தது.
இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது.
மாநிலங்களவை எம்பியான கமல்:
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.
திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக தரப்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், மநீம சார்பில் ஒருவரும், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 நபர்கள் மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழியாத சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
What's Your Reaction?






