விஜய் ஆண்டனி கொடுத்த வாய்ப்பு.. தவறவிட்ட கார்த்திக் நேத்தா!
அருவி, வாழ் படங்களின் வரிசையில் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சக்தித் திருமகன்’ படமும் நியோ பொலிட்டிக்கல் பேசும் படமாக வந்திருக்கிறது என பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான நேற்று (24.07.2025) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குநர் அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
விஜய் ஆண்டனி கொடுத்த வாய்ப்பு:
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, விஜய் ஆண்டனியுடனான ஆரம்பக்கால நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டார். கார்த்திக் நேத்தா பேசுகையில், “முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு இது 25-வது திரைப்படம். அவரைப் பற்றி பேசும் போது மலரும் நினைவுகள் தான் வருகிறது. நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது சூளைமேடு கில் நகரில் அவர் ஸ்டுடியோ வைத்திருந்தார்.
'நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்' என்ற பாடல் மிகவும் பிரபலமான காலகட்டம் அது. அந்த சமயத்தில் தான் நான் அவரது ஸ்டுடியோவிற்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அந்தப் பாட்டையே வேறு மாதிரி எழுதி கொடுங்கள் என்று எனக்கு தேர்வு வைத்தார். நானும் எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மெட்டுக்குள் வரும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நான் அழைக்கிறேன் என்று கூறினார்.
சிறிது நாட்களிலேயே ஒரு தொடருக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடலுக்கு மெட்டு கொடுத்து எழுத சொன்னார். 'என்னை தேடி காதல் என்னும் தூது அனுப்பு' என்ற மெட்டுக்கு நான் எழுதிக் கொடுத்தேன். என்னோடு சேர்ந்து தேன்மொழி தாஸ் என்கிற கவிஞரும் பாடல் எழுதினார். ஆனால் அவருடைய வரிகள் ஆழமாக இருந்ததால் அவருடைய வரிகளையே எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு நான் வாய்ப்பு தேடவில்லை. நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தேன்.
விஜய் ஆண்டனி சார் நடித்த கொலை படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரோமியோ படத்தில் நான் எழுதிய 'சிடு சிடு' பாடல் நன்றாக பேசப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சாருக்கு நான் எழுதும் முதல் படம் இது. அந்த வகையில் எனக்கும் இந்த படம் ஸ்பெஷல் திரைப்படம் தான்” என்றார்.
நியோ பொலிட்டிக்கல் படம்:
இயக்குநர் அருண் பிரபு குறித்து கார்த்திக் நேத்தா பேசுகையில், “அருண் உடைய முதல் இரண்டு படங்களை பற்றி பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அருவி மற்றும் வாழ் போன்ற திரைப்படங்களை நுணுக்கமாக கவனித்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சமூகமாகவும் அரசியலாகவும் உளவியல் ரீதியாகவும் சரி இல்லை என்று தோன்றுகின்ற படமாக இருக்கும். அதிலும் அருவி நாம் தப்பு தப்பாக வாழ்ந்து கொண்டு சமூகத்தை தவறாக சொல்கிறோம் என்று நம்மை கேள்வி கேட்கும் படமாகவும், சுட்டி காட்டுகின்ற படமாகவும் இருக்கும்.
ஒரு தனி மனிதன் சரியாக இல்லை என்றால் ஒரு சமூகம் சரியாக அமையாது என்பதை மிக அழகாக, ஆழமாக வாழ் படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் என்பதை தாண்டி நாம் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை முன்பும் பின்பும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது நமக்கு புரியவில்லையே என்கிற ஏக்கம் இந்த இரண்டு படங்களிலும் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வாழ் படத்தை வைத்து சமூகத்தில் நாம் கலந்து ஆலோசத்திருக்க வேண்டிய படம்.
அந்த வரிசையில் இந்தப் படமும் நியோ பொலிட்டிக்கல் பேசும் படமாக வந்திருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது” என தெரிவித்தார் கார்த்திக் நேத்தா.
What's Your Reaction?






