”மிகப்பெரிய அனுபவத்தை சிறைவாழ்க்கை கொடுத்திருக்கும்..” - செ.பா-வை சந்தித்த பின் ஈஸ்வரன் பேட்டி!
செந்தில்பாலாஜி ஜாமின் பெற்று வெளியில் வந்துள்ள நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். பிறகு புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில், சட்ட ரீதியாக சந்தித்து நிச்சயம் வெளிவருவேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் நன்றி” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் செந்தில்பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு விசாரணை கைதியாக குற்றம் சாட்டப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, மிகப்பெரிய வேதனைகளை மன அழுத்தத்தை அனுபவித்துவிட்டு அன்பு சகோதரர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தால் இன்றைக்கு பிணை கொடுக்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.
மிகப்பெரிய வேதனைகளை அவர் அனுபவித்திருந்தாலும் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையை அறிந்த உடன் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலிமையான வார்த்தைகளால் அவரை வரவேற்று உள்ளார்.
முதலமைச்சர் சொன்ன இரண்டு வரிகளும் எவ்வளவு வலிமையானவை என்பதை எல்லோரும் அறிவோம். அதுதான் அன்பு சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஆறுதல். முதலமைச்சரின் இவ்வளவு அன்பான, உறுதியான வார்த்தைகளால் வரவேற்று இருப்பது செந்தில்பாலாஜியின் சிறை வேதனைகளை மறக்கடிக்க செய்திருக்கும். அதே போல் விடுதலையானவுடன் திமுக தொண்டர்களும் தலைவர்களும் தமிழக மக்களும் ஆரவாரத்தோடு அவரை வரவேற்றுள்ளார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், “சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அவர் கோவையில் இருந்து விடக்கூடாது என்பதற்காக மனதில் கொண்டு அவர் எந்த அளவுக்கு துன்புறுத்தப்பட்டார் என்பதை எல்லாம் எல்லோரும் அறிவோம். அவையெல்லாம் செய்திகளாக வந்திருந்தன. தொடர்ந்து சிறையில் வைத்து ஒரு சிலருக்கு ஒத்துவிட்டு கொடுத்துப் போகாவிட்டால் அவர் சிலையிலிருந்து வரவே முடியாது என்ற செய்திகள் கூட பரப்பப்பட்டது. ஆனால் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் எவ்வளவு மிரட்டல் இருந்தாலும் அதை எல்லாம் தாங்கிக் கொண்டு என்றைக்கும் உறுதியான உள்ளத்தோடு அவர் வெளியில் வந்துள்ளார்.
இன்றைக்கு வலிமை பொருந்தியவராக அவர் வந்திருக்கின்றார். கண்டிப்பாக மிகப்பெரிய வீரியத்தோடு அதிக எழுச்சியோடு அவர் செயல்படுவார். மிகப்பெரிய அனுபவத்திலும் இந்த சிறை வாழ்க்கை கொடுத்திருக்கும் அவரை இந்த நேரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நாங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துகின்றோம். மேலும் அவர் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தபின்பு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார்.
What's Your Reaction?