மின்சார உதடுகள்-பாய்ஸன் பேபி!

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்-பாய்ஸன் பேபி!
மாலைமதி

"ஏய் கொஞ்சம் திரும்புடீ... உன்னோட சடைப்பின்னலைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு!" என்றாள் மஹிமா.
சில்வியா செல்லமாகச் சிணுங்கினாள்.
"ஆமா ஆமா... நான்தான் கல்யாணப் பொண்ணு பாரு... அங்கே பாருடீ... எவ்ளோ நீளமான முடி... அல்மோஸ்ட் இடுப்பு வரையிலும் போயிருக்கு..!”
அவர்கள் இருவரும், சென்ற மாதம் நடந்த காஷ்மீர் திருமணத்திற்காக, ஆனந் நாக் என்ற நகரத்திற்கு வந்திருந்தார்கள். அது 2024ம் வருடத்தின் நான்காவது கால் பாகம்.
சலீமின் அக்கா திருமணம். மணமகன் ஜம்மு நகரத்தைச் சேர்ந்தவர். இன்றைக்கு
'ரஸம் இ மெஹந்தி'
விழா கஷ்மீரி முஸ்லிம்களின் திருமண விழா மூன்று பகுதிகளாக நடப்பதே கொஞ்ச நாள் முன்புதான் சில்வியாவிற்குத் தெரியும். அட்லீஸ்ட்.. அப்படி மஹிமாவிற்குத் தோன்றியது.
"அழகில் இரண்டு வகை இருக்கிறது. அசரடிக்கிற அழகு! பரவசப்படுத்துகிற அழகு!" என்றான் சலீம்.
"ம்ம்ம்... வந்துட்டாருய்யா... பாரசீக கவிஞர் ஜலாலுதீன் ரூமியோட மறுபிறவி! அசந்து போனாதானே பரவசம் வரும்?
சில்வியா சலீமிற்குச் சளைக்காமல் டஃப் கொடுத்தாள்..
"க்ரிஞ்சா பேசாதடா!"

சலீம் சமாளித்தான். தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்தான்... "அங்கதான் நீங்க தப்புப் பண்றீங்க. அசரடிக்கிற அழகு... அப்படியே என்ன செய்வது என்று தெரியாமல் மனசைக் குழப்பிப் போட்டுடும். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சொதப்பி வைக்கும். ஆனால், பரவசப்படுத்துகிற அழகு ஒரு ஆண்மகனை இமயமலையை இட்லி போல பார்க்க வைத்துவிடும்.. அவனைக் கவிஞனாக்கி..”
“சாம்பார் ஊற்றிச் சட்டினியாக மாத்திச் சாப்பிட வைத்துவிடுமாக்கும். நல்லா பண்றப்பா நீ... ஏற்கெனவே இங்க காஷ்மீர் குளிரு தாங்கல. சரி, ஒண்ணு மட்டும் சொல். சில்வியாவோட அழகு எந்த டைப்பில் வரும்..?" என்று கேட்டாள் மஹிமா.

"அவளுடையது இரண்டு வகையும் சேர்ந்தது. அசந்து போய்ப் பரவச நிலை எய்த வைப்பது. வள்ளுவர் 'கள்ளுக்கில்லை' என்று சொன்னது. பை த வே... இது 'ஃபிரெஞ்ச் பிரெய்டு' மாடல் ஹேர் ஸ்டைல் பின்னாடி ஹெர்ரிங் போன் மாதிரி இரண்டு வரிசையில் உள்ள வந்திருக்கு பார்... சரிதானே சில்வியா..?"
சலீம் ஒரு கூல்ட்ரிங் கிளாஸை எடுத்துக்கொண்டே பேசினான்.
உயரமான வெய்ட்டர் ஒருவன் ஏந்திச் சென்ற தட்டு, அந்த கூல் ட்ரிங்க்கை எடுக்கும்போது சமநிலை இழந்தது. மூன்று கண்ணாடி கிளாஸ்கள் கீழே விழுந்து சிதறியிருக்கும். சில்வியா மட்டும் நானோ விநாடிகளில் ரியாக்ட் செய்திருக்காவிட்டால்.
அவளுடைய சுண்டுவிரல், பர்கண்டி ஒய்ன் கிளாஸின் இடுப்பை வளைத்தது. இரண்டாவது கை, சாய்ந்து கொண்டிருந்த இரண்டாவது ஷெர்ரி ஒய்ன் கிளாஸை ஒயிலாக நிமிர்த்தியது. அவளுக்கு மூன்றாவது கை இல்லை என்கிற குறை பார்க்கிறவர்களுக்குத் தெரியாமல், சுண்டுவிரலால் நிலைப்படுத்திய கிளாஸை விட்டுவிட்டு, மூன்றாவது துலிப் கிளாஸில் இருந்து ஒரு சொட்டுப் பழரசம் வெளியே வராமல்
அந்த இடது கையே நேராக்கியது. 

மொத்தத் தட்டையும் கைகளால் வாங்கி, ஒரு அராபெஸ்க் போஸ் கொடுத்து மேஜை மீது வைத்தாள். சலீம் தன் இதயத்தைத் தானே விழுங்கினான்.
"இதெல்லாம் ஸ்டேஜில் செய்ய வேண்டிய மேஜிக் டீ..! எப்படி நீ..." என்று ஸ்டன் ஆனாள் மஹிமா.
"பார்த்துப்பா...” என்று சர்வரிடம் சொன்ன சில்வியா, "பதினெட்டுக்கும் மேற்பட்ட ஒயின் கிளாஸ் டைப்புகள் உள்ளன. எனக்கு காக்டெய்ல் மாஸ்டராகப் பிடிக்கும். ஆனால், டீ டோட்டலர். மே பி, முன் ஜென்மத்தில் கஸ்லராக இருந்திருப்பேனோ என்னவோ.! சரி வாங்க, நூர்ஜஹானை வாழ்த்தப் போவோம்!” என்றாள் சில்வியா.
'யக்னி' தயாராகி மணம் வீசிக்கொண்டிருந்தது. 'பாய்சன் பேபி' பாடல் பாடிய ஆர்கெஸ்ட்ரா நின்று...
"மைக் டெஸ்ட்டிங் ஒன் டூ த்ரீ.."
கட்டைக் குரலால் ஒருவன் பேச, பலரும் நடக்க இருக்கிற விபரீதத்தைப் பற்றித் தெரியாமல் மேடையை நோக்கி ஆவலாகத் திரும்பினார்கள். பாய்சன் பேபி பாடகியின் நெற்றியில் ஒரு துப்பாக்கி முனையை வைத்து, இன்னொரு கையில் மைக்கைப் பிடித்திருந்தான் அவன்.


பாய்சன் பேபி அழ ஆரம்பித்திருக்க கல்யாண வீடு கொஞ்சம் கொஞ்சமாகக் கலவர வீடாக மாறிக்கொண்டு இருந்தது.
இயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சில்வியா தாழ்ந்த குரலில் மஹிமாவிடம், 'கோட் த்ரீ டூ' எனக் கிசுகிசுத்தாள்.
மஹிமா கண்களால் காபி செய்தாள்.
"பதிமூணு பாம் செட் பண்ணியிருக்கோம். இங்கே வந்திருக்கிற 'கிஸ்மீ பெட்ரோலியம் புராடெக்ட்ஸ் ஓனரோட பொண்ணு எங்க டார்கெட் ஒன்! ஜெபருன்னிஸா... நீ ஒளிஞ்சு பயனில்லை. ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு விநாடி அதிகமானாலும், நீ அதுக்குள்ள வாசல்பக்கத்துல இருக்கிற பிளாக் பென்ஸில் ஏறல... முதல் குண்டு வெடிச்சுடும்! உன் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அல்ரெடி. இன்னும்

ஒரு நிமிஷம்தான்!”
ஒரு பெரியவர், வெள்ளை ஜாமா குர்த்தாவில், நரைத்த தலையோடு சூழ்நிலை புரியாமல், "என்னப்பா... யார்றா நீங்க.." என்று எழுந்திருக்க, அவரது நெஞ்சில் ரோஜா குத்தாமலே சிவப்பு மலர்ந்து வழியக் கீழே சாய்ந்தபோது... டோட்டல் டெரர் அந்த பிஸ்மில்லா கல்யாண மண்டபத்தை ஆக்கிரமித்தது.

"உங்க வசதிக்காக என் பெயர் சீட்டா என்று வெச்சுக்குவோம்! இந்த மண்டபத்துல நாங்க பத்து பேர் இருக்கோம். இந்த அதிகப்பிரசங்கியை டெலி கன்னில் சுட்டது என் ஆள்தான். எங்களுக்கு சிக்கனம் ரொம்பப் புடிக்கும். புல்லட்டை வீணா வாங்கித் தொலைக்காதீங்க..."
கொஞ்ச நேரம் ஆனது. யாரும் அசையவில்லை.
"சரி மக்களே, ஜஹனோரா எங்களோட ஃபர்ஸ்ட் டெமோ பார்க்க வெச்சுட்டா. இப்போ அந்த சாண்டலியரைப் பாருங்க!"
அவன் விரல் காட்ட, நடு மத்தியில் இருபதடி உயரத்தில் தொங்கிய அந்த மிகப் பெரிய ஆறடி விட்டம் கொண்ட சாண்டலியர் பெல்ஜியன் கிளாஸ்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னியது. அடுத்த
“பூம்ம்ம்ம்...”
பெருஞ்சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. பயம் அங்கு எல்லார் நெஞ்சிலும் உற்பத்தியானது. பல மடங்கானது.
சில்வியா டக்கென்று எழுந்தாள். நேராக நடந்தாள். வாசல் பக்கத்தில் நின்றிருந்த பென்ஸ் காரில் கதவு திறக்க, அதற்குள் ஏறிக் காணாமல் போனாள். அந்த காரின் மிகக் கறுப்பான கண்ணாடிகளைத் தவிர, காருக்குள்ளே நடப்பது என்ன என்று எதுவும் பக்கவாட்டில் சலீமிற்கோ மஹிமாவுக்கோ துப்புரவாகத் தெரியவில்லை.

“வெரிகுட் ஜெபருன்னிஸா...” என்று சொல்லிக் கொண்டே, மேடையில் இருந்து கீழே குதித்து, பென்ஸ் காரை நோக்கி ஓட ஆரம்பித்தான் சீட்டா.
கூட்டத்தில் அங்கங்கே இருந்த மற்ற ஒன்பது பேர்களும் வாசலை நோக்கி ஓடினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow