சித்தரஞ்சன் சாலையில் சீக்ரெட் மீட்டிங்... விஜயை வீழ்த்த புதிய வியூகம்..!
தவெகவை எதிர்கொள்ள புதிய கூட்டணி வியூகத்தை கையில் எடுத்திருக்கும் திமுக, சித்தரஞ்சன் சாலையில் சீக்ரெட் மீட்டிங்கை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் அடுத்த தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணி கணக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த சூழலில், சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலோசனையில் மாஜி அமைச்சர்கள் வேலு, நேரு, தங்கம் தென்னரசு மற்றும் ஸ்டாலினின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது, த.வெ.க. தலைவர் விஜயின் அரசியல் வளர்ச்சி மற்றும் அதனை எதிர்கொள்ள வேண்டிய வியூகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு இணையான அரசியல் பலத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு, அன்புமணிக்கு உள்ள சமூக அடித்தளம், தினகரனின் தென்மாவட்ட அரசியல் செல்வாக்கு ஆகியவை கூட்டணிக்கு புதிய பலத்தை தரும் என சிலர் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய நேரு மற்றும் வேலு, ”தி.மு.க. மீது பிடிப்புள்ளவர்களின் வாக்குகள் நமக்கு விழுந்திருக்கின்றன. ஆனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் நமக்கு வாக்களிக்க விரும்பவில்லை. இதை மாற்ற வேண்டும். அதேபோல் சோஷியல் மீடியாக்களில் மூழ்கி கிடப்பவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு தீர்வாக சீமான், அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நம் பக்கம் வளைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விஜய்க்கு அடுத்தபடியாக சீமான் மற்றும் அன்புமணிக்கு சோஷியல் மீடியாக்களில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதேபோல் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் மத்தியில் தினகரனுக்கும் செல்வாக்கு இருக்கிறது. இவர்கள் அனைவரையும் ஒரே அணியில் சேர்க்கும்போது நம் கூட்டணியின் முகம் மாறும். புதிய பொலிவு பெறும். வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும்” என ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருக்கின்றனர் என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவது எளிது என்றும் நம்பிக்கை தந்ததுடன் மேலும் சில காரணங்களையும் அடுக்கியிருக்கின்றனர். அதாவது, ”நாம் தமிழர் சீமானுக்கு இனி அரசியல் எதிர்காலம் மிக முக்கியம். எனவே அவர் கூட்டணிக்குள் வந்துவிடுவார். அவரை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். அன்புமணியும் அப்படித்தான். அ.தி.மு.க. கூட்டணியில் தொடர அவருக்கு விருப்பம் இல்லை. அதுமட்டுமின்றி, இனி எந்த நிலையிலும் மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ.க. தனக்கு வழங்க வாய்ப்பில்லை என்றும் அன்புமணி முடிவுக்கு வந்துவிட்டார். எனவே, தி.மு.க. கூட்டணியில் இணையலாம் என நினைக்கிறார். தினகரனிடம் மட்டும்தான் பேசவேண்டும். அவருக்கான டீல் சரியாக அமைந்தால் கண்டிப்பாக நம் பக்கம் வருவார்” என்று ஸ்டாலினுக்கு மாஜிக்கள் நம்பிக்கை தந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கூட்டணி முயற்சி சாத்தியமாகுமா என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது, சீமான் தொடர்ந்து தனித்த அரசியல் பாதையை வலியுறுத்தி வருகிறார். அன்புமணியின் கூட்டணி முடிவு பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும். தினகரனின் முடிவும் எதிர்கால அரசியல் சூழலை பொறுத்து அமையும்.
இந்நிலையில், முப்பெரும் விழாவுக்கு பிறகு கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. விஜயை எதிர்கொள்ள புதிய கூட்டணியா? அல்லது வழக்கமான அரசியல் கணக்கா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?