”கணவனை தேடும் மனைவி கதை…” – உதயநிதி சர்ச்சை பதிவு..!
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.
இந்த நிலையில், தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், ”சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சர் விஜயாக நடந்து கொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு தான் உதயநிதி இப்படியான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தவெக – திமுகவினர் இடையே இணையத்தில் மோதல் வெடித்துள்ளது.
What's Your Reaction?













