மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழக வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

Mar 8, 2024 - 20:51
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மக்களவை தேர்தலுக்கான 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் பாஜக 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியும், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசித்து வந்தது. 

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பட்டியலில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர், SC, ST, OBC மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 24 பேர் இடம்பெற்றுள்ளனர். 

பட்டியலில் அதிகபட்சமாக காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த மாநிலமாக உள்ள கேரளாவில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கரில் 6 தொகுதிகள், கர்நாடகாவில் 7 தொகுதிகள், தெலங்கானாவில் 3 தொகுதிகள், மேகாலயாவில் 2 தொகுதிகள் மற்றும், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீண்டும் களமிறங்குகிறார். ஆழப்புழாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கன்னூர் தொகுதியில் கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மற்றும் திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் போட்டியிடுகிறார். 

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலைப்போல் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் தமிழக வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதேபோல் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும், திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில், விரைவில் காங்கிரசின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என கே.சி.வேணுகோபால் கூறியிருக்கும் நிலையில், அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow