பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்.
கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாகத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவையில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள்... என்ன காரணம்?
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, சூலூர், பொள்ளாச்சி மற்றும் கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக புதிதாக விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் ‘மறு சரிபார்ப்பு’ என்ற காரணத்துடன் தலைமைச் செயலகத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப வருமானம், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து மற்றும் பிற தகுதி அளவுகோல்கள் உள்ளிட்டவை மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
“எனக்கே பணம் வரல... புதுசா அவங்களுக்கா?”
இதற்கிடையே, ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பெற்று வந்ததாகக் கூறும் சில பெண்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களின் தகுதி சரிபார்ப்பு ஒருபுறம் நடைபெறும் நிலையில், ஏற்கனவே திட்டத்தில் பயனாளிகளாக இருந்தவர்களுக்கு தொகை ஏன் வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“ஆல்ரெடி வாங்கிட்டிருந்த எனக்கே பணம் வரல. இப்ப புதுசா அவளுக்கு தரப்போறீங்களா?” என்ற பயனாளிகளின் ஆதங்கம், இந்த விவகாரத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.
யாருக்காக மகளிர் உரிமைத்தொகை திட்டம்?
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில் சுமார் 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் இந்தத் தொகையைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
2026ஆம் ஆண்டிலும் ஏற்கனவே உள்ள பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கும் நடைமுறை தொடர்ந்துள்ளது. அதன்பின்னர், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் மே 2026-ல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
யாரெல்லாம் இந்தத் திட்டத்துக்கு தகுதியானவர்கள்?
திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குடும்பத் தலைவியாக இருக்கும் 21 வயது பூர்த்தியடைந்த பெண் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும். மேலும், குடும்பத்துக்கு 5 ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமான பொருளாதார அளவுகோல்களில் ஒன்றாகும்.
ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் வீட்டு மின்சாரப் பயன்பாடு உள்ள குடும்பங்களும் தகுதி வரம்பில் இருந்து விலக்கப்படுகின்றன.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தாலும், அவரது மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படலாம். திருமணமாகாத தனிப் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்களும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் திட்டத்தில் பயனடையலாம்.
இப்போது முக்கியமான கேள்வி என்ன?
ஒருபுறம் ஏற்கனவே பயனடைந்து வந்தவர்களுக்கு தொகை வரவில்லை என்ற புகார்; மறுபுறம் புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவது என மகளிர் உரிமைத்தொகை விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
கோவையில் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 15 ஆயிரம் விண்ணப்பங்களில் எத்தனை பேருக்கு இறுதியாக தகுதி உறுதி செய்யப்படும்? ஏற்கனவே பயனாளிகளாக இருந்து தொகை வராதவர்களின் கணக்குகள் எப்போது சரிசெய்யப்படும்? மறு சரிபார்ப்புக்குப் பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும்?
இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதிலை அரசிடம் எதிர்பார்த்து பெண்கள் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?