மகாளயபட்ச காலம் எப்போது? என்ன செய்யணும்?முநீஸ்வர சாஸ்திரிகள் முழு விளக்கம்!
மகாளய பட்ச காலத்தில் முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் ஆன்மீக பலன்களை விளக்குகிறது இந்த பதிவு.
பலன் தரும் பரிகாரம் : வி.ராம்ஜி
நாம் எத்தனையோ வழிபாடுகளைச் செய்கிறோம். அருகில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்குகிறோம். கார்த்திகை நட்சத்திரநாளில் முருகன் கோயில், செவ்வாய்க்கிழமையில் துர்கை, திருவோணத்தில் பெருமாள், சனிக்கிழமையில் அனுமன், சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் என வழிபாடுகளைச் செய்துவருகிறோம். இதிலும் இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு என்று இருக்கின்றன.
குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால், மற்ற எந்த தெய்வபலன்களும் கிடைக்காது. அந்த குலதெய்வத்தின் கடைக்கண் நம் மீது படவேண்டும் என்றால், முன்னோர் வழிபாடு செய்யாமல் எதுவும் சாத்தியமில்லை என்கிறார் பிரம்மஸ்ரீ முநீஸ்வர சாஸ்திரிகள்!
‘’வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் இருக்கின்றன. அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். அமாவாசை, தமிழ்மாதப் பிறப்பு, இறந்தவர்களின் திதி வரும் நாள், கிரகண காலம் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்து முன்னோர்களை, பித்ருக்களை ஆராதனை செய்யவேண்டும். உத்தராயன புண்ணியகாலம், தட்சிணாயன புண்ணிய காலம் என வருகிற அமாவாசையை ஆடி அமாவாசை, தை அமாவாசை என இன்னும் ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்து முன்னோரை வணங்கச் சொல்லி நமக்கு வழிகாட்டியிருக்கிறது தர்மசாஸ்திரம்.
அதேபோல், புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை என்பது இன்னும் இன்னுமே ஸ்பெஷல். இதை மகாளயபட்சம் என்கிறோம். பட்சம் என்றால் பதினைந்து. புரட்டாசி பெளர்ணமியில் இருந்து பிரதமை தொடங்கி அமாவாசை வருகிற காலம் முழுவது மகாளயபட்ச காலம். இந்தக் காலத்தில் பதினைந்து நாட்களும் நாம் நம் முன்னோர்களுக்கு உண்டான வழிபாடுகளை, உரிய நியமங்களுடன் செய்யவேண்டும்.
செப்டம்பர் 26ம் தேதி புரட்டாசி பெளர்ணமி. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமை திதி. இந்த நாளில்தான் தொடங்குகிறது மகாளயபட்ச காலம். பூலோகம், தேவலோகம், சிவலோகம் போல் பித்ருலோகம் என்றும் இருப்பதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. இந்த பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் உள்ள நம் குடும்பத்தின் முன்னோர்கள், அந்த லோகத்தில் இருந்து வெளியேறி, பூலோகத்துக்கு வருவதாகவும் அவர்களின் சந்ததியினராக, பரம்பரையினராக இருக்கிற நம் இல்லங்களுக்கு வந்து, நம்மைப் பார்த்து, நம் குறைகளையெல்லாம் கவலைகளையெல்லாம் அறிந்து, ஆசீர்வதிப்பதாகவும் ஐதீகம்!’’ என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
இதனால்தான், ‘எங்க அப்பன் தாத்தனும் பூட்டனும் சேர்த்துவைச்ச சொத்தையெல்லாம் அழிச்சிட்டான்’ என்றோ, ‘எங்க அம்மா எங்கிட்ட பாசமாவே இல்ல’ என்றோ, ‘எங்க அப்பா எனக்கு எதுவுமே சேர்த்துவைக்கலை’ என்றோ முன்னோர்கள் குறித்து பழிக்காமல் எப்போதும் அவர்களை நினைத்து வணங்கவேண்டும் என்றும் இறந்துபோனவர்கள் குறித்து குறைகளையும் அவர்களின் தவறுகளையும் சொல்லக்கூடாது என ஆன்றோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
‘’ஆகவே மகாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்கள், நம் வீட்டுக்கு சூட்சும வடிவாக வருகிறார்கள். விருந்தினர்களாக வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை விருத்தியடையும்; சந்ததிகள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்!
மகாளய பட்ச காலமான பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யலாம். நம் முன்னோர்களை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். மகாளய பட்சமான பிரதமைத் தொடங்கி 15 நாட்களில் ஒருமுறையாவது தர்ப்பணம் செய்யவேண்டும். மகாளய அமாவாசை தினத்தில் அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி,மத்யாஷ்டமி, மகா வியதிபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்து வேண்டிக்கொள்வது மும்மடங்கு பலன்களைத் தரும்! அதேபோல், உணவு, உடை, காய்கறிகள், பழங்கள், காலணிகள், குடை, போர்வை என நம்மாலான உதவிகளை எவருக்கேனும் தானம் செய்வது பாவங்களைப் போக்கி, புண்ணியங்களை பெருக்கிக் கொடுக்கவல்லவை’’ என மகாளயபட்ச பெருமைகளை விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
பூர்வ கன்மம் (நம்முடைய முன்னோர்கள் செய்த வினை மற்றும் நம்முடைய முற்பிறவியில் நாம் செய்த வினை), சஞ்சித கன்மம் (நாம் அனுபவித்தது போக மிஞ்சியுள்ள வினை), பிராப்த கர்மம் (இந்த பிறவிக்கான காரணமான வினை), இந்த மூன்று கர்மங்கள் இணைந்து இரண்டு வினைகளாக பிரிகின்றன. அதாவது நல்வினை, தீவினை! இந்த வினைகள் தான் நம் வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய அஸ்திவாரமாக, சக்தியாகவே அமைகின்றன. நம் வாழ்க்கை, சிந்தனை, செயல்கள் என அனைத்தும் நம் முன்னோர்களின் வினைப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
மகாளய பட்ச காலமான 15 நாட்களில் எந்தெந்த நாளில் திதி சிரார்த்தம், தில தர்ப்பணம், பிண்டப் பிரதானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? தில தர்ப்பணம் என்றால் எள்ளு கொண்டு தர்ப்பணம்.
பிரதமையில் தர்ப்பணம் செய்தால் செல்வம் பெருகும். துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் வாரிசு வளர்ச்சி அதாவது வம்ச விருத்தி தடையின்றி வளரும்; செழிக்கும். திருதியை திதியில் தர்ப்பணம் செய்தால், திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சதுர்த்தி திதி தர்ப்பணம், பகை விலகும்; எதிரிகள் தொல்லை நீங்கும். பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை ஆராதித்தால், விரும்பிய பொருட்கள், ஐஸ்வர்ய கடாட்சங்கள் கிடைக்கப்பெறலாம்.
சஷ்டி திதியில் பிரார்த்தனை செய்தால் தெய்வீகத் தன்மை ஓங்கும். முகத்திலும் புத்தியிலும் தேஜஸ் நிலைத்திருக்கும். சப்தமி திதியில் வழிபட்டால் நம் முன்னோர்கள் எந்தப் பிறவியிலோ செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும். அஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் நல்லறிவும் நற்சிந்தனைகளும் பெறலாம். நவமி திதியில் தர்ப்பணம் செய்தால், ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
தசமி திதியில் வழிபட்டு பிரார்த்தனை செய்தால், தடைகள் நீங்கும்; விருப்பங்கள் நிறைவேறும். ஏகாதசி திதி வழிபாடு, கலை கல்வி கேள்விகளில் விற்பன்னராக்கும். சிறந்து விளங்கச் செய்யும்! துவாதசி திதியில் முன்னோர்களை ஆராதனை செய்தால் தங்கம், வைர ஆபரணங்கள் சேரும். வீடு மனை யோகம் கிடைக்கப்பெறலாம். திரயோதசி திதியில் பித்ரு வழிபாடு செய்வதால், நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். நீண்ட ஆயுள், தலைமுறை கடந்த சொத்துச் சேர்க்கை உண்டாகும்! சதுர்த்தசி திதியில் வழிபட்டால், முழுமையான இல்லறம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்.
உறவுகள் ஒற்றுமை மேலோங்கும். மகாளய பட்சத்தின் நிறைவுநாளான புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டால், மூதாதையர்கள் அனைவரின் ஆசியும் கிடைக்கப்பெறலாம். ரிஷிகள் மற்றும் தேவர்களின் அருளைப்பெறலாம்!
மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ!
What's Your Reaction?



