30 நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோகும்- முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆரூடம் 

செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கினேன். திருப்பி கொடுத்துவிட்டேன் என்று லஞ்சம் வாங்கியதை ஒப்புகொண்டதால் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.

Oct 3, 2024 - 15:32
30 நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோகும்- முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆரூடம் 

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோய்விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் செம்பனார்கோவிலில் அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான பவுன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ பேசுகையில், அதிமுக 32 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல்வேறு சாதனைகளையும் சரித்திர திட்டங்களையும் படைத்ததை பட்டியலிட நேரம் கிடையாது.

தவறான கருத்துக்களை அதிமுக பேசியது கிடையாது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். காவிரி, முல்லைப் பெரியாறு, காவிரி தண்ணீர் திட்டம் உள்ளிட்ட ஜீவாதார பிரச்னைகளை கையில் எடுத்து வெற்றி கண்டவர்கள் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள். ஆனால் திமுகவினர் ஆட்சியில் அமர்ந்து சுகமாக சம்பாதித்து 144 வாரிசுகளோடு சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் திமுகவின் சாதனை. இந்தியாவின் நிதி உதவியில் வாழ்ந்து வரும் இலங்கை நம் நாட்டு படகுகளை தேசிய உடமையாக்கி படகுகளை திருப்பி தரமுடியாது என்று கூறுகிறது. 

ராமநாதபுரம் மீனவர்களுக்கு 10 கோடி அபராதம் விதித்துள்ளது. அதையும் தாண்டி நெஞ்சை நொறுக்கும் சம்பவமாக தமிழக மீனவர் ஐந்து பேருக்கு மொட்டை அடித்து இலங்கை ராணுவம் கொடுமைப்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசு பதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை இலங்கையை கண்டிக்கவில்லை.

 தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்று  என்று மார்தட்டும் திமுக அரசு மீனவர் பிரச்சனையில் ஒன்றும் செய்யாதது வெட்ககேடானது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்து தனது மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறார்.  

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து அமைச்சராகியுள்ள செந்தில் பாலாஜி 30 நாட்களுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. அதிகாரமிக்க அதே பதவியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ளதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்த 72 மணி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளது விசாரணைக்கு வந்துள்ளது.வரும் அமாவாசைக்குள் தாங்காது என்றும், நாட்டில் வழக்கை சந்தித்த தலைவர்கள் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தபிறகு அமைச்சராவது இயற்கை. ஆனால் பெயிலில் வந்த விசாரணை கைதி செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அமைச்சராக்கியுள்ளார்.

 செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கினேன். திருப்பி கொடுத்துவிட்டேன் என்று லஞ்சம் வாங்கியதை ஒப்புகொண்டதால் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. கைது செய்யப்பட்டு வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி தப்பிக்க வாய்ப்பில்லை என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow