அரசு ஊழியர்கள் நலன் பற்றி நீங்கள் பேசலாமா? - இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’’ என தனது வெறுப்பை இபிஎஸ் வெளிப்படுத்தினார்.
அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ’மொட்டை’த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. ’சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்’ என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி ’கபட வேடதாரி’ என்றெல்லாம் பேசலாமா?
அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை ‘மொட்டைக் காகித அறிக்கை’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?
‘மொட்டைக் காகித அறிக்கை’ என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து ’மொட்டையாக’ வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்’ என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!
அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.
ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ’’இவ்வளவு சம்பளமா?’’ என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ’’அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’’ என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
’கபட வேடதாரி’ பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது” என கடுமையாக சாடியுள்ளார்.
What's Your Reaction?