பட்டாக்கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள்... பட்டப்பகலில் நடந்த பயங்கரம்... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியால் இளைஞரை வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 17, 2024 - 20:30
பட்டாக்கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள்... பட்டப்பகலில் நடந்த பயங்கரம்... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்...

திருப்பத்தூர் அடுத்துள்ள காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது அப்சல். எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வரும் இவருக்கும், திருப்பத்தூர் செட்டி தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில், இருவரும் சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. 

இதில் கோபமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தி மற்றும் இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், வாணியன்கோயில் தெருவில்  நின்று கொண்டிருந்த முகமது அப்சலை கொலை வெறியுடன் துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். இதில், நெற்றி மற்றும் கையில் காயமடைந்து முகமது அப்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். மேலும் தடுக்க வந்த நபர் ஒருவரையும் அந்த இளைஞர்கள், இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.  இதனிடையே இதுகுறித்த பதைபதைக்க வைக்கும், சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 7 பேர் மீது திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில், தேர்தல் நேரத்தில், அதுவும் பட்டப்பகலில் கஞ்சா போதையால் அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்கள், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow