கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்சன்.. சிறையில் விஐபி மரியாதை.. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஜாலியாகத்தான் இருக்கிறார். தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் குற்றவாளியா? விஐபி போல ராஜ மரியாதை தரப்படுவது ஏன் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர்.
கன்னட திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷன். காட்டேரா, ராபர்ட், எஜமானா, குருஷேத்ரா, சக்ரவர்த்தி உள்ளிட்ட படங்கள் தர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. டெவில் தி ஹீரோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் தர்ஷன்.
சித்தூரைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள மெடிக்கலில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி, திடீரென கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இளைஞரின் கொலை விவகாரத்தில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
உயிரிழந்த ரேணுகா சுவாமி, தர்ஷனின் தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு மெசேஜ்கள் அனுப்பியதாகவும், அதில், தர்ஷன் பற்றி தவறான தகவல்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தன்னைப் பற்றி தவறான தகவல்களை நடிகை பவித்ரா கவுடாவுக்கு செல்போனில் அனுப்பியதால், ரேணுகா சுவாமியை கொலை செய்த தர்ஷனை கடந்த சில மாதங்களுக்கு காவல்துறையினர் கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தனர்.
ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே சட்ட விதிமுறைகளை மீறி, சிறையில் தர்ஷனுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் தர்ஷன் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி குடித்துக்கொண்டும் சிகரெட் பிடித்துக்கொண்டும் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தர்ஷன் உடன் ரவுடி வில்சன் மற்றும் அவரது மேலாளராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் அந்த புகைப்படம், சிறை விதிகள் மீறப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ்.ஷிவானா , ரேணுகாசாமி கொலை வழக்கில், போலீசார் மீது நம்பிக்கை இருந்தது. இந்த புகைப்படத்தை கண்டதும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என எண்ணம் வந்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
இதனிடையே தர்ஷன் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பி உள்ளது. சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது எப்படி நடக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த புகைப்படம் குறித்து சிறை அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இதனிடையே தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிறையில் தர்ஷன் டீ மற்றும் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?