கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா நடிக்க மாட்டேன்.. பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி எக்ஸ்க்ளூசிவ்
கல்யாணத்துக்குப் பிறகு நல்ல மனைவியா, நல்ல அம்மாவா இருக்கவே விரும்பறேன். என்னோட குழந்தைங்க என்னைய மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்குறேன் என்று பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியலில் தலைகாட்டிய வைஷ்ணவிக்கு, ‘பொன்னி’ சீரியலில் கதாநாயகி அந்தஸ்து கிடைத்துள்ளது. பார்ப்பதற்கு சின்னப்பெண் போல தோற்றமளித்தாலும், சீரியலில் பெரியமனுஷி போல நடித்து அசத்துகிறார். குமுதம் சிநேகிதிக்காக அவர் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ.
உங்களப் பத்தி சொல்லுங்களேன்?
‘‘எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. எங்க வீட்ல எல்லாருக்கும் படிப்புதான் முக்கியம். ஆனா, எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம். வீட்ல எல்லாரும் என்கிட்ட ‘படி... படி...’னு சொல்வாங்க. ஆனா, நானோ ‘நடி... நடி...’னு சொல்லி, மீடியாவுக்கு வந்துட்டேன். விஜய் டி.வி.யில சிவகார்த்திகேயன் ‘அது இது எது’ ஷோ பண்ணதைப் பார்த்து, ‘நாமளும் எப்போ இந்த மாதிரி ஷோ பண்ணுவோம், நம்மள இன்டர்வியூ எடுத்தா எப்படிப் பேசணும்?’னு சின்ன வயசுல கண்ணாடி முன்னாடி நின்னு ரிகர்சல் பண்ணிட்டு இருப்பேன்.
ஸ்கூல் லீவு டைம்ல ஷூ வாஷ் பண்ணும்போது, அந்த ஷூவை எப்படிக் கழுவணும்னு கமென்ட்ரி கொடுத்துட்டே கழுவுவேன். ஒரு கட்டத்துல படிப்பு நமக்கு செட்டாகாதுன்னு நல்லாவே தெரிஞ்சுது. காலேஜ் படிக்கும்போது வீட்டுக்குத் தெரியாம திருட்டுத்தனமா போய் ‘ஆல்பம் சாங்’ல நடிச்சேன். அது, பத்தோட பதினொண்ணா இருக்கும்; யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சேன். ஆனா, முதல்ல பண்ண ஆல்பம் சாங்கை எங்க ஊர் லோக்கல் சேனல்ல டெலிகாஸ்ட் பண்ணிட்டாங்க. அது வீட்டுக்குத் தெரிஞ்சு, செமயா டோஸ் விட்டாங்க.’’
சீரியல் வாய்ப்பு எப்போ கிடைச்சது?
‘காலேஜ் முடிச்சதும் அடுத்து என்ன பண்ணப்போற?’னு கேட்டாங்க. ‘நான் சென்னைக்குப் போயி, UPSC எக்ஸாமுக்கு படிக்கப்போறேன்’னு சொன்னேன். அவங்களும் ஆச்சரியத்தோட பச்சைக்கொடி காட்ட, நான் இங்கவந்து சின்சியரா படிக்கலாம்னு நினைச்சேன். காரணம், அப்போ எனக்கு நடிப்புல்லாம் செட்டாகாது. எப்படிப் போய் ஆடிஷன்ல கலந்துக்கணும்னும் தெரியாது. மீடியாவுல ஃபிரெண்ட்ஸ் யாரும் இல்ல. அதனால, எதுவும் யோசிக்காம UPSC-க்கு படிச்சுட்டு இருந்தேன்.
ஆனா, என்னோட மனத்திருப்திக்கு ‘டிக்டாக்’ வீடியோஸ் பண்ணிட்டு இருந்தேன். அந்தச் சமயம்தான் ஒரு கேஸ்டிங் கால் வந்துச்சு. ஆடிஷன் போனேன். அடுத்தடுத்து எல்லா ஆடிஷனும் போனேன். எதுவுமே ஓகே ஆகாததால சலிச்சுப்போயிட்டேன்.
படிக்கவும் முடியல; நடிக்கவும் முடியல. ‘ஊருக்கே வந்து செட்டில் ஆகிடுறேன்’ வீட்ல சொல்லிட்டு, மறுபடியும் ஊருக்குப் போயிட்டேன். திரும்பவும் ஒரு கேஸ்டிங் கால் வந்துச்சு. ஒரு சீரியல்ல சிஸ்டர் கேரக்டர் இருக்குன்னு சொன்னாங்க. நானும் சரினு சொன்னேன். என்னோட ஃபர்ஸ்ட் டைரக்டர் ராஜிவ் பிரசாத் சார்தான், கேமரா முன்னாடி நிக்குறது, பேசுறதெல்லாம் எப்படினு எனக்குக் கத்துக்கொடுத்தாரு. அடுத்ததா என்னைய மோல்டு பண்ண பெஸ்ட் டைரக்டர் பிரவீன் சார்தான்.’’
‘பொன்னி’ வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?
‘‘நான் ‘ராஜா ராணி’ சீரியல் பண்ணிட்டு இருந்தப்போ, ‘அடுத்து ஒரு வித்தியாசமான கேரக்டர் பண்ணணும்’னு நினைச்சிட்டிருந்தேன். எந்த கேரக்டர்ல நடிச்சாலும், அந்த கேரக்டராவே மாறி, ஒரு 4, 5 நாள் எல்லார்கிட்டயும் பழகுவேன். அந்த கேரக்டர்ல போட்டோ ஷூட் பண்ணுவேன். ஒருவேளை, Dusky கேரக்டர்னா எப்படி இருப்போம்னு யோசிச்சி, ‘டஸ்கி’ மேக்அப் போட்டு, போட்டோ ஷூட் பண்ணேன். ஆனா, அதுபோலவே ‘பொன்னி’ கேரக்டர் வாய்ப்பு வரும்னு சத்தியமா நான் நினைச்சுக்கூட பார்க்கலங்க.
நேர்ல பார்த்தா ரொம்ப சின்னப்பொண்ணா இருக்கீங்க. ஆனா, ‘பொன்னி’யில ரொம்ப மெச்சூர்டா தெரியறீங்களே?
‘‘இந்த சீரியல்ல எனக்கு ரொம்பவே வித்தியாசமான மேக்அப். அதுவும் பிளாக் மேக்அப் வேற. படிய தலை சீவி, பக்காவ இருக்கும். அதை யாருமே கண்டுபிடிக்க மாட்டாங்கனு நினைச்சேன். ஆனா, ‘பொன்னி’ கேரக்டர், மக்கள்கிட்ட ரீச் ஆனபிறகு, சாதாரணமா ரோட்ல போனாக்கூட, ‘நீங்க பொன்னிதான?’னு அடையாளம் கண்டுபிடிச்சு கேட்கிறாங்க. ‘நாமதான் பொன்னி கெட்டப்ல இல்லையே... எப்படிக் கண்டுபிடிச்சாங்க?’னு யோசிப்பேன். அப்புறம், நம்ம கெட்டப் சேஞ்ச் ஆனாலும்கூட, அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டுறாங்கனு நினைக்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.’’
உங்க வருங்கால கணவர், எங்களுக்கெல்லாம் தெரிஞ்சவரா? அவருக்கு ஏதாவது ‘செல்ல பெயர்’ வச்சிருக்கீங்களா?
‘‘அவரு மீடியாவ சேர்ந்தவரு கிடையாது. அவரு யாருன்னு எங்க மேரேஜ்ல எல்லாருக்கும் தெரியவரும். நான் அவரை, ‘பட்டு’னு செல்லமா கூப்பிடுவேன். பதிலுக்கு அவர் என்னைய ‘பாப்பு’னு கொஞ்சுவாரு. நெக்ஸ்ட் இயர் எங்களுக்கு மேரேஜ் ஆகப்போகுது.’’
உங்களோட அடுத்தடுத்த புராஜெக்ட் பத்தி சொல்லுங்க...
‘‘அடுத்ததா ஒரு பெரிய புராஜெக்ட்டுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. படம் சம்பந்தமான புராஜெக்ட்தான். அதைப் பத்தி இப்போ எதுவும் சொல்லமுடியாது. அதுக்கான நேரம் வரும்போது அவசியம் சொல்றேன்.’’
கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பீங்களா?
‘‘கண்டிப்பா நடிக்கமாட்டேன். ஏன்னா, என்னோட வொர்க் என்னன்னு எனக்குத் தெரியும். அதுக்காக நிறைய டைம் எடுத்துக்கணும்னு சூழ்நிலை இருக்கும்போது, ஃபேமிலி லைஃப்க்கு அது ஒத்துவருமான்னு தெரியல. இதுவரைக்கும் வைஷ்ணவியா நான் இருந்துட்டேன். அதனால, கல்யாணத்துக்குப் பிறகு நல்ல மனைவியா, நல்ல அம்மாவா இருக்கவே விரும்பறேன். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க அம்மா வேலைக்குப் போயிடுவாங்க. அப்போ அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுமாதிரி என்னோட குழந்தைங்க என்னைய மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்குறேன் என்று மெச்சூர்டாக பேசினார் வைஷ்ணவி.
What's Your Reaction?