நாகர்கோவில் காசி வழக்கில் ட்விஸ்ட்.. நண்பரை தூக்கிய போலீஸ்.. பாலியல் வழக்கில் மீண்டும் விசாரணை..

Apr 28, 2024 - 08:14
நாகர்கோவில் காசி வழக்கில் ட்விஸ்ட்.. நண்பரை தூக்கிய போலீஸ்.. பாலியல் வழக்கில் மீண்டும் விசாரணை..

பள்ளி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை ஏராளமானோரின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவரது நண்பரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜின். இவர்  பள்ளி,  கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் திருமணமான பெண்கள் என ஏராளமான பெண்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி தனது இச்சை வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிப்பது போல் நடித்து அவர்களை தனது காம பசிக்கு இரையாக்கியதுடன் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம், நகைகள், பொருட்களையும் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 
 
அந்த வகையில், காசியால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் அவரது அந்தரங்க லீலைகள் அம்பலமாக தொடங்கின. மேலும், பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் காசி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை தோண்ட தோண்ட அதிரவைக்கும் பல தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காசியின் நண்பருக்கும் தொடர்புள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். மேலும், காசியின் தந்தை தங்கபாண்டியனும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 
 
இதுதொடர்பாக  காசி, அவரது தந்தை மற்றும் அவரது நண்பர் ராஜா சிங் ஆகிய 3 பேர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து காசியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜா சிங்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் ராஜா சிங் துபாயில் தங்கி ஓட்டுநராக வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் துபாயில் இருந்து ராஜா சிங் சென்னை திரும்பி வருவதாகவும் சென்னையில் ரகசியமாக தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட சிபிசிஐடி போலீசார், துபாயில் இருந்து திரும்பி வந்த ராஜா சிங்கை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து  நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜா சிங்கை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 
 
ஏராளமான பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow