தனுஷ் பெயரை தவிர்த்துவிட்டு நன்றி சொன்ன நயன்தாரா

தடையில்லா சான்று வழங்கிய பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்.

Nov 20, 2024 - 18:09
தனுஷ் பெயரை தவிர்த்துவிட்டு நன்றி சொன்ன நயன்தாரா

தன்னுடைய ஆவணப்படத்திற்கு என்ஓசி (NOC)தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை நயன் தாரா குறித்த ஆவணப்படமான Nayanthara: Beyond the Fairy Taleக்காக நானும் ரவுடித்தான் படத்தின் 3 வினாடி காட்சிக்காக ரூ.10 கோடி கேட்டதாக நடிகர் தனுஷ்க்கு எதிராக நடிகை நயன் தாராவின் காட்டமாக அறிக்கை பேரும் பேசுபொருளானது.

முன்னதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நெட் ஃபிளிஸ்ஸில் 'Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ்(NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

'நானும் ரௌடிதான்" திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ₹10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல். ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் Spread Love" என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா குறித்த ஆவணப்படம் அவரது பிறந்தநாளான நவ.18ம் தேதி வெளியானது. அதில் தனது சினிமா பயணம், காதல், திருமணம் என அனைத்தையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் தடையில்லா சான்றிதழ் தரவில்லை என கூறப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நடிகை நயன் தாரா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்தான அறிக்கையில், ஷாருக்கான், உதயநிதி ஸ்டாலி, சிரஞ்சீவி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோருக்கும் தான் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் நடிகர் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை. மேலும், படங்கள் குறித்த நினைவு இடம்பெறுவதற்கான அனுமதியை தயக்கமோ, தாமதமோ இன்றி தடையில்லா சான்று வழங்கியதற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் தடையில்லா சான்று வழங்கிய பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறை தயாரிப்பாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow