Nazriya Nazim: நஸ்ரியாவுக்கு என்ன தான் ஆச்சு..? வெளியான கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
குறும்புத்தனமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த, நஸ்ரியா "தான் கடுமையான மன இறுக்கத்தில் இருப்பதாகவும், கொண்டாட்ட மனநிலையில் தான் இல்லை" எனவும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகை நஸ்ரியா. பகத் பாசிலை திருமணம் செய்த பின், சினிமாவில் நடிப்பதை ஓரம் கட்டி வந்தவர் தற்போது மீண்டும் திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சூட்சம தர்ஷினி திரைப்படம் மலையாளம், தமிழ் உட்பட வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடித்தது. இதன் பின் திடீரென்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் இல்லாமல் போனார். பொது வெளி நிகழ்விலும் பெரிதாக பங்கேற்கவில்லை. இதற்கிடையில், கேரள அரசின் சார்பில் சிறந்த நடிகைக்கான விருது நஸ்ரியாவிற்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது:
அதனைத்தொடர்ந்து அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் மனதளவில் சில குழப்பங்களுடன் இருப்பதால் நண்பர்களின் அழைப்புகளை எடுக்கவில்லை. பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. கொண்டாட்ட மனநிலையில் நான் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதான் காரணம் என வெளிப்படையாக கூறாத நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை: “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக நான் ஏன் சமூக ஊடகம் மற்றும் பொது நிகழ்வுகளிலிருந்து விலகி இருக்கிறேன் என்பதை விளக்க விரும்புகிறேன். மனதளவிலான குழப்பங்கள் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான சவால்கள் எனக்குள் ஒரு போராட்டமாக இருந்தது.
மனதளவிலான குழப்பங்களால் நான் எனது 30-வது பிறந்தநாள், சூட்சம தர்ஷினி வெற்றியையோ கூட கொண்டாட முடியவில்லை. நான் முற்றிலும் ஓய்வெடுத்தேன். நெருங்கிய நண்பர்கள் பலரின் அழைப்புகளை நான் எடுக்கவில்லை, அவர்களது குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
சமீபத்தில், சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதைப் பெற்றேன், அது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும் என்றாலும், நான் இன்னும் ஒரு கடினமான கட்டத்தின் நடுவில் இருக்கிறேன். முழுமையாக மீண்டு வர எனக்கு இன்னும் சிறிது நேரம் ஆகலாம். ஒவ்வொரு நாளும் மன இறுக்கத்திலிருந்து மீண்டு வருவதில் முன்னேற்றத்தை காண்கிறேன். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன், நான் விரைவில் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவேன். அதுவரை, கவனமாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தன் துணையான ஃபஹத் ஃபாசிலுடன் இணக்கமாக தான் நஸ்ரியா இருந்து வருகிறார் என கேரள சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆதலால், இது விவாகாரத்து தொடர்பான குழப்பமாக இருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என மாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. என்னவாக இருப்பினும், நஸ்ரியா மீண்டும் தனது குறும்புத்தனத்துடன் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் நஸ்ரியாவின் இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






