Tim David: தனி ஆளாக போராடிய டிம் டேவிட்.. சொந்த மண்ணில் RCB மோசமான சாதனை

நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இப்போட்டியின் மூலம் நடப்புத் தொடரில் சொந்த மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெங்களூரு அணி தோல்வியினை சந்தித்துள்ளது.

Apr 19, 2025 - 10:28
Tim David: தனி ஆளாக போராடிய டிம் டேவிட்.. சொந்த மண்ணில் RCB மோசமான சாதனை
RCB vs PBKS

ஐபிஎல் 18-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 7 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் எந்த அணி ப்ளே-ஆப் செல்லும் என்பதை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்களும் பெரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் பெங்களூருவிலுள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான லீக் போட்டி நடைப்பெற்றது.

இரவு நேரத்தில் பெய்த மழையினால், ஆட்டம் தொடங்க தாமதமானது. மொத்த ஓவர்கள் 14-ஆக குறைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கோலி 1 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து திணறியது பெங்களூரு அணி. டிம் டேவிட், பட்டிதார் இணை கொஞ்சம் நம்பிக்கைத் தர அதுவும் வெகுநேரம் நீளவில்லை.

இவனுங்களை நம்புனா வேலைக்கு ஆகாது என பேட்டை சுழற்ற ஆரம்பித்தார் டிம் டேவிட். கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். ஆட்டத்தின் முடிவில் 14 ஓவர்களுக்கு பெங்களூரு அணி 95 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் டிம் டேவிட் மட்டும் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி:

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. குறைவான இலக்கு என்பதால், பொறுமையாக ஆடினர். இறுதியில் 12.1 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக நேஹல் வதாரா 33 ரன்கள் குவித்து இருந்தார். தனி ஆளாக போராடிய டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியின் மூலம் நடப்புத் தொடரில் சொந்த மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெங்களூரு அணி தோல்வியினை சந்தித்துள்ளது. ஓட்டுமொத்த ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் அதிக தோல்வியை சந்தித்த அணி என்கிற மோசமான சாதனையினையும் நேற்று பெங்களூரு அணி நிகழ்த்தியுள்ளது.

சொந்த மண்ணில் மோசமான தோல்வி:

பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 46 முறை தோல்வியுற்றுள்ளது ஆர்சிபி. இதற்கு அடுத்தப்படியாக டெல்லியுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 45 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது டெல்லி அணி. இந்த வரிசையில் மற்ற அணிகள் முறையே கொல்கத்தா (ஈடன் கார்டன் மைதானம்- 38 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (வான்கடே-34 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் (மெஹாலி-30 தோல்வி).

நேற்றைய போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்திலும், 4 வெற்றி,3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4 இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளது. இன்று 2 ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற உள்ளது. குஜராத்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி அகமாதபாத் மைதானத்திலும், ராஜஸ்தான்-லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரிலும் நடைப்பெற உள்ளது.

Read more IPL news on : kumudam news

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow