சிவசக்தி பாண்டினுக்கு ஆதரவு... பெண் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்... தயாரிப்பாளர் சங்கத்தில் முற்றும் மோதல்!
செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக யாரால் செயல்பட முடியும் எனத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேள்வி எழுப்பப்படுக்கிறது.
சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரணமாகத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் வெடித்துள்ள மோதல் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் அஜித் நடித்த காதல் கோட்டை, பிரசாந்த் நடிப்பில் கண்ணெதிரே தோன்றினாள் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் தெலுங்கில் படம் எடுக்க உள்ளதாகக் கூறி, பிரபல நிறுவனத்திடம் 1 கோடியே 70 லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி கொடுக்காததோடு, மோசடி செக் கொடுத்தும் ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் பிரபல நிறுவனம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், கடந்த 26ம் தேதி சிவசக்தி பாண்டியனைக் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மயங்கினேன் தயங்கினேன், என்கவுண்டர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பெண் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி என்பவர், சிவ சக்தி பாண்டியனுக்குத் தயாரிப்பாளர் சங்கம் உதவவில்லை எனக் கூறி, சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவிலேயே ஆடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி மற்றும் அவரது நிர்வாகத்தைக் குறிவைத்தே அவர் இந்த ஆடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் ஏற்கனவே முட்டல் மோதல் இருந்து வரும் நேரத்தில் ராஜேஸ்வரி, பிணத்தில் காசு பார்க்கும் கூட்டம், குழி தோண்டி புதைத்துவிடுவார்கள் என தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் குறித்துப் பேசியிருந்தார். அந்த ஆடியோ தற்போது வெளியாகி சங்கத்திற்குள் இருக்கும் மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ராஜேஸ்வரியின் இந்த விமர்சனத்தால் கொதித்துப்போன தயாரிப்பாளர் ஈஸ்வரன், சங்கத்தைத் தவறாகப் பேசுபவர்கள் அனைவரும் செக் மோசடியிலும், கோர்ட் கேஸிலும் சிக்கியுள்ளவர்கள் என்றார். சிவசக்தி பாண்டியனைக் காப்பாற்றச் சங்கத் தலைவர் முரளி ராமசாமி எடுத்த முயற்சிகள் எடுத்த நிலையில், பாண்டியன் சமாதான முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை என்றார். ஆனால், இதை எல்லாம் தெரியாமல் சீட்டிங் செய்பவர்கள் வந்து நியாயம் பேசுகிறார்கள் எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பான ஆடியோவும் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேஸ்வரி, ஈஸ்வரன் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாகச் சிறு, சிறு விஷயத்தில் தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வருவதாகவும், முன்பு பிரச்சனை வந்தால் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்.ஆனால் தற்போது அது போன்று நடக்கவில்லை என ஆடியோவில் பேசி பதிவிட்டதாகவும், இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக தான் பேசியதாகக் கூறி தயாரிப்பாளர் ஈஸ்வரன் என்பவர் தொடர்ச்சியாகத் தன்னை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக யாரால் செயல்பட முடியும் எனத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேள்வி எழுப்பப்படுக்கிறது. இருதரப்பையும் பேசி சுமூக முடிவு எடுக்க முயற்சிகள் எடுக்கும் போது ஒத்துழைப்பு அளிக்காமல் தவிர்த்தால் என்னதான் செய்வது என சங்க நிர்வாகிகள் கேட்கின்றனர்.
What's Your Reaction?