Siraj: கடைசி நாளில் மிரட்டிய சிராஜ்.. தொடரை சமன் செய்தது இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. தொடரை சமன் செய்ய இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக கருண்நாயர் 57 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நடப்பது டெஸ்ட் போட்டியா? டி20 போட்டியா? என வியக்கும் அளவிற்கு பந்து நாலாப்புறமும் எல்லைக்கோட்டினை தாண்டி பறந்தது. முதல் விக்கெட்டுக்கு வெறும் 13 ஓவர்களில் 92 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. கேரவ்லி 64 ரன்களிலும், டக்கட் 43 ரன்களிலும், போப் 22 ரன்களிலும், ரூட் 29 ரன்களிலும் அவுட்டாகினார். நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை இங்கிலாந்து அணி. மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவே சிரமப்பட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பேட்டிங்கில் அசத்திய இந்தியா:
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்த, நைட்வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்களை குவித்து இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடக்க இந்திய அனி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களை குவித்தது.
374 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியினர், பேட்டிங்கில் தங்களது முழுப்பலத்தையும் காட்டத் தொடங்கினர். ஒருக்கட்டத்தில் ஜோரூட், ஹேரி ப்ரூக் சதம் விளாச ஆட்டம் இங்கிலாந்து அணி பக்கம் சாய்ந்தது.
கடைசி நாளில் மிரட்டிய சிராஜ்:
இறுதி நாளான இன்று இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்கள் இருந்தது. இங்கிலாந்து அணியே வெற்றிப்பெறும் என பலர் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அசத்தினர். அதிலும் சிராஜ் இன்று அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்தார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் என மொத்தம் இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 9 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டியுள்ளார் சிராஜ்.
What's Your Reaction?






