”குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு...” வசனம் மூலம் அமைச்சர் கொடுத்த பதில்

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவரின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா ? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 16, 2024 - 11:21
”குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு...” வசனம் மூலம் அமைச்சர் கொடுத்த பதில்

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பால், ரஸ்க் உள்ளிட்ட மழை நிவாரண பொருட்களை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார். பின்னர் பாரிமுனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மழை ஏற்பட்ட தினம் தொடங்கி மூன்றாவது நாளாக 24 மணி நேரமும் முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். 2021ம் ஆண்டுக்குப் பிறகு பெருமழை பெய்த இடங்களில் எல்லாம் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்குவது குறைந்து வருகிறது”

”தாழ்வான பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் 17 செ.மீட்டர் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்கவில்லை. மின்சாரம், பால் விநியோகம், உணவு விநியோகம் போன்றவற்றில் எந்த தடையும் இல்லை. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் எப்படி மக்களை காப்பதற்கு போராடுவார்களோ அப்படி முதலமைச்சர் களத்தில் மக்களை காக்க போராடி வருகிறார்”

”பால் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், ரஸ்க் எந்தவித தடையும் இல்லாமல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உணவு விநியோகமும் சரியான அளவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் தாழ்வான இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது.”

”மழை ஆரம்பித்தவுடன் களத்தில் நின்றவர் தமிழக முதலமைச்சர். வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னுடைய பதில் இதுதான். மழை ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகி உள்ளன. எதிர்க்கட்சி தலைவரின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? அதிமுகவில் நடக்கும் குளறுபடிகளுக்கு முதலில் எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்”

”இந்த ஆட்சியில் நிர்வாக செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக தயாராக இருக்கிறது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான் பல இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தண்ணீர் தேங்கவில்லை. 40 ஆண்டு 50 ஆண்டுகாலம் மழைநீர் தேங்கிய இடங்களில் திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் தண்ணீர் தேங்கவில்லை. தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீருக்கும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.”

”குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு நாங்கள் செவி சாய்க்க தயாராக இல்லை. மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகரில் தண்ணீர் தேங்கவில்லை. ஓட முடிந்தவர்களால் தான் ஓட முடியும். மழை வெள்ளத்தில் பாஜக களத்தில் எங்கே இருக்கிறது. கடவுளின் அரசாக கடவுளாக  முதல்வர் சுற்றி வருகிறார். அவரை இவர்கள் குறைக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என பேசினார் அமைச்சர் சேகர் பாபு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow