முத்தான இலாபம் தரும் முத்து வளர்ப்பு......ஒன்றரை வருடத்தில் லாபம் ரூ. 4,27,000......
நவரத்தினங்களின் ராணி முத்து... 6 தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் விளையும் முத்து... அருகே பாக் ஜலசந்தியில் விளையும் முத்து... உலகில் அரேபிய வளைகுடா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், மத்திய அமெரிக்கா, வெனிசுலா போன்ற பல்வேறு நாடுகளில் விளையும் முத்துக்களைவிட தரத்தில் மிக உயர்ந்ததாகக் காணப்பட்டது. பாண்டிய நாட்டு பரதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முத்துக்குளித்தல் தொழிலினால் 'பாண்டிய நாடு முத்துடைத்து' என உலகப் பிரசித்தமானது. பல்வேறு மேலைநாட்டினர் கடல் வழியே பாண்டிய நாட்டு கொற்கை துறைமுகம் வந்து முத்துக்களை வாங்கிச்சென்று உலகம் முழுதும் வணிகம் செய்தனர்.
உலகப் பேரழகி கிளியோபாட்ரா பாண்டிய நாட்டு முத்துக்களை அணிந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டார் என்பது சிறப்பு செய்தி. ஆட்கள் கடலில் மூச்சடக்கி மூழ்கி சேகரிக்கும் கிளிஞ்சல்களில் கிடைக்கும் முத்துக்களின் அளவு... உலக சந்தையின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. ஆனால், கடினமான வேலை என்பதால் முத்துக்குளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போனது. முத்து தேவையைப் பூர்த்தி செய்ய உயர்ந்துவரும் முத்துக்களின் விலையினால் வருவாய் ஈட்ட 1896ல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாய் முத்துக்களை விளைவிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து அதற்கு காப்புரிமையும் பெற்றுக் கொண்டார்.
இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் முத்துக்கள் மூன்று வகை. இயற்கை முத்து கடலில் பாரம்பரியமாக கிடைப்பது. தற்போது இம் முத்துக்களின் உற்பத்தி மிகக் குறைவாக இருப்பதால், இதன் விலை மிக மிக அதிகம். இரண்டாவது, செயற்கை முத்து. நவீன தொழில்நுட்பத்தில் தொழிற்சாலையில் அச்சு அசலா இயற்கை முத்து போலவே செயற்கையாக உருவாக்கப்படுபவை.
இவ்வகை முத்துக்களுக்கு முத்துக்களின் குணநலன்கள் ஏதுமிருக்காது. ஆனால். தோற்றம் மட்டும் இருக்கும். மூன்றாவது. வளர்ப்பு முத்து. இன்றைய சந்தையின் பெருமளவு தேவையை வளர்ப்பு முத்துக்கள் மட்டுமே ஈடு செய்கின்றது. உலகெங்கும் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டாலும் சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இத்தொழில் பெரிய அளவில் நடைபெறுகின்றது.
தமிழகத்தில் இத் தொழில் பெரிய அளவில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஓசூருக்கு அருகில் கர்நாடக எல்லைக்குள் அனேக்கல் என்னும் ஊரில் பிரஜ்வால், விஜய் எனும் இரண்டு இளைஞர்கள் பகுதி நேரமாக குறைந்த முதலீட்டில் முத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 'மண்வாசனை'க்காக இவர்களிடம் உரையாடினோம். முத்து வளர்ப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட செய்திகள் நம்மை வியப்பில் மூழ்கடித்தது. இதன் அடிப்படை அறிவியலைப் புரிந்து கொண்டால் வளர்க்கும் முறையும் சந்தைப்படுத்துதலும் எளிதே என்பதை உணர்த்தினர்.
முத்து வளர்ப்பு பற்றி அறிந்து கொள்ள இதற்கான முறையான பயிற்சி பெறுவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரியிலும் பெங்களூருக்கு அருகில் உள்ள ஹெப்பாலில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்திலும் (KVK) மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரிலும் சில தனியார் பண்ணைகளிலும் இதற்கான பயிற்சி கிடைக்கின்றது. இங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், பயிற்சியும் இத்தொழில் துவங்கத் தேவை.
இன்று உலகச் சந்தையில் கிடைக்கின்ற நூறு முத்துக்களில் ஒன்று மட்டுமே ஆழ்கடலில் மூழ்கி எடுப்பது; மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பதும் வளர்ப்பு முத்துக்களே. கடலில் கிடைக்கும் முத்துக்கள் வளர்வது ஆய்ஸ்டர் (Oyster) எனும் சிப்பிகளில் வளர்ப்பது. இது கடல் நீரில் மட்டுமே வளரும். ஆனால், நன்னீரில் வளர்க்க 'மட்டிகள்' என அழைக்கப்படும் முசல் (Mussel) வகை சிப்பிகளே ஏற்றது. இந்த நன்னீர் சிப்பிகளில் லேமல்லிடன்ஸ், மார்ஜினாலிஸ், லே கோரியான்ஸ் என மூன்று வகைகள் உண்டு. இந்த முத்து வளர்ப்பிற்கான தண்ணீரில் TDS 250-300ppm எனும் அளவிலும், கார அமிலத்தன்மை PH 6.58.5 அளவிலும் அமோனியா அளவு மிக அதிகபட்சம் 2.5% எனும் அளவிலும் இருக்கவேண்டும். அமோனியா இல்லாமலே இருக்கும் தண்ணீரின் தன்மை மிகவும்சிறப்பானது.
மூத்து வளர்ப்பிற்கான விதைப்பண்டம் முசல் சிப்பிகள் இவைகளை சேகரிக்க வேண்டும். இந்த சிப்பிகளின் வயது 25 ஆண்டுகளாவது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். நமக்குத் தேவையான ஏற்ற வகை சிப்பிகளை வட மாநிலங்களில் தேர்வு செய்த நம்பிக்கையான விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இந்த முசல்கள் தண்ணீரை விட்டு வெளியில் எடுத்தாலும் மூன்று நாட்கள் விதையிலும் உயிர் வாழும். மேற்கு வங்காளம், ஒரிசா, மகாராஷ்ட்ராவின் சதுப்பு நிலங்களில் கிடைக்கும் முசல்களை சேகரித்து விற்பனை செய்பவர்கள் இருக்கின்றனர்.
இந்த முசல் சிப்பிகளை ஒவ்வொரு கட்டத்திலும் இறந்து போனவைகளைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டியது மிக அவசியம். இந்த சிப்பிகளை முறைப்படுத்தி அடுத்து அறுவை சிகிச்சை செய்யவேண்டும். பீட் அல்லது நியூக்லஸ் எனப்படும் பொருளை சிப்பிக்குள் செலுத்தும் முறைதான் அறுவை சிகிச்சை. மனித உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அருகில் உள்ள திசுக்கள் வளர்ந்து அந்த இடத்தை நிரப்பி அதனை குணமாக்குவது போல சிப்பிக்குள் செலுத்தப்படும் வெளிப்பொருளை படிகமாதல் முறையில் பூசி, மூடும். அது சிறிது சிறிதாக வளரும். அவ்வாறு வளர்ந்த பொருளே முத்து. நாம் உட்செலுத்தும் பொருளின் வடிவிலேயே வளரும் என்பதால் நமக்குத் தேவையான வடிவிலேயே முத்தைப் பெற இயலும்.
அறுவைச்சிகிச்சை செய்ய பயிற்சிபெற்ற ஆட்கள் தேவை. லாகவமாக சிப்பிகளினைப் பிளந்து அதனுள் பீட் அல்லது நியூக்லஸை சரியான இடத்தில் பொருத்த வேண்டும். ஒரு சிப்பி குறைந்தது இரண்டு முத்துக்களை எளிதில் வளர்க்கும். இவ்வாறு தயார் செய்த சிப்பிகளை மஞ்சள்தூள் போன்ற ஆன்டிபயாடிக் கலந்த தற்காலிக குளத்தில் இரண்டு நாட்களுக்கு வைக்க வேண்டும். இங்கு இறந்த சிப்பிகளை எளிதில் இனங்கண்டு அப்புறப்படுத்தலாம். இறந்த சிப்பிகள் இரண்டாகப் பிளந்த தோற்றத்தில் காணப்படும்.
தற்காலிக குளம் அல்லது தொட்டியில் இருந்து உயிருள்ள சிப்பிகளை மட்டும் எடுத்து வளர்ப்பு குளத்திற்கு மாற்றவேண்டும். சிலர் பயோபிளாக் எனும் தொட்டிகளிலும் வளர்க்கின்றனர். தண்ணீரின் ஆழம் 9 அடி அளவில் இருக்கும்போது, அமோனியா உற்பத்தி குறைகின்றது. குளம் 80 அடி நீளம் 80 அடி அகலத்தில் 9 அடி ஆழத்தில் அமைத்து அதற்கு பாலிதீன் லைனிங் போர்த்தி தண்ணீர் கசியாமல் செய்யவேண்டும். அதன்பின் அடிப்பகுதியில் 2 அடி உயரம் மண் போட்டால் குளத்தில் இயற்கை சூழல் அமையும். குளத்தில் ரோகு, கட்லா போன்ற மீன் வகைகளையும் வளர்க்கலாம். மீன்கள் தொடர்ந்து நீந்துவதால் தண்ணீரில் சலனம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.
குளத்தில் தண்ணீரை நிரப்பும் முன் ஆய்வகத்தில் தண்ணீர் மாதிரியைக் கொடுத்து ஆய்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வளர்ப்பு துவங்கிய பின்னர் வாரம் ஒருமுறையேனும் தண்ணீர் சோதனை செய்யவேண்டும். இதற்கான ஆய்வு உபகரணம் கிடைக்கிறது. அதைக் கொண்டு நாமே தண்ணீர் மாதிரியை சோதித்துக் கொள்ளலாம். இந்தக் குளத்தில் நைலான் வலைகளில் தனித்தனியே பொதிந்து வைக்கப்பட்ட சரங்களை மிதவை கட்டப்பட்ட கயிறுகளில் கட்டி குளத்தில் தொங்க விடவேண்டும். இவ்வாறு தொங்க விட்டால் மட்டுமே அவ்வப்போது சிப்பிகளில் நிலைமையைக் கவனித்துப் பார்க்க இயலும்.
இந்த சிப்பிகள் எப்படி இருக்கும்?
நீள்வட்ட வடிவத்தில், இரண்டு கைகளை ஒன்றாக வைத்தால் இருப்பது போன்று நடுப்புறம் லேசா உப்பி காணப்படும். இரண்டு பகுதிகளில் ஒரே வடிவத்தில் இணைந்திருக்கும். உட்புறம் பிளந்தால் நீள்வட்ட குழி இருக்கும். சிப்பிகளின் வெளிப்பகுதி அடர்நீலம், கருப்பு, அடர் ப்ரௌன் அடர் சாம்பல் என பல்வேறு வண்ணத்தில் இருக்கும். மேற்புறம் நீள்வட்ட ரேகைகள் காணப்படும். கடல் சிப்பிகளான ஆஸீய்டரைவிட நன்னீர் சிப்பிகள் அளவில் சிறியதாகவே இருக்கும். 8 முதல் 12 செ.மீ. அளவில் இருக்கும்.
சிப்பிகளை தண்ணீரில் கட்டித் தொங்க விட்டால் மட்டும் போதாது. அதற்குத் தேவையான உணவு கொடுப்பது அவசியம். ஸ்பைரூனிலா எனும் சுருள்பாசி,
பச்சை பாசிகள் பைடோபிளான்டா எனும் மிதவை வாழிகள் அல்லது அலைவாழிகள் இதற்கான உணவு. இவை தண்ணீரிலே வளர்ந்து பெருகக் கூடியவைதான். துவக்கத்தில் அரிசி தவிடு, கடுகு புண்ணாக்கு போன்றவற்றைக் கலந்து ஊறவைத்துப் போட்டால், இவற்றின் வளர்ச்சி அதிகம் இருக்கும். நல்ல பிரகாசமான சூரிய ஒளி இவற்றின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
முத்துக்கள் வளர்கின்ற சிப்பிகளை வாரம் ஒருமுறை பார்க்க வேண்டும். இறந்த சிப்பிகள் தொடர்ந்து குளத்தில் இருந்தால் நோய்க் கிருமிகள் உண்டாகி நல்ல சிப்பிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டாகும். ஆகவே, குளத்திற்குள் பயணம் செய்ய காற்று செலுத்தப்பட்ட மிதவைப் படகில் குளத்தில் பயணித்து சிப்பிகளைக் கவனிக்க வேண்டும்.
ஒரு சிப்பியில் உள்ள முத்து தேவையான அளவில் வளர்ந்துவிட்டதா என்பதையும், அதன் தரத்தையும் பார்த்து அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்ய குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளாகும். முத்துவின் வடிவமும் அளவும் அதிகரிக்க மேற்கொண்டு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். வளர்ந்த சிப்பிகளை சேகரித்து கவனமாகப் பிளந்து உள்ளிருக்கும் முத்துக்களை சேகரித்து, சுத்தம் செய்து அதனைத் தரம் பிரித்து சந்தைப்படுத்தல் பணியில் ஈடுபடலாம்.
முத்துக்களை அதன் வடிவம், அளவு, நிறம், பளபளப்பு, மேற்பரப்பில் தன்மையைப் பொறுத்து, பிரித்து விற்பனை செய்யலாம்.
அதிகப்படியாக ஆபரணங்களுக்குத்தான் விற்பனையாகிறது. முத்துக்கள் பல நிறங்களில் இருக்கின்றது. வெள்ளை, பிங்க், சில்வர், கிரீம், பழுப்பு, பச்சை, நீலம், கருப்பு, மஞ்சள், ஊதா என பல்வேறு வண்ண முத்துக்கள் இயற்கையாகவே காணப்படுகிறது. வளர்ப்பு முத்துக்களை செயற்கை முறையாக பிளீச் செய்து, சாயம் ஏற்றியும் வண்ணங்களை மாற்றுகின்றனர். எத்தனை ரசாயன முறை மாற்றம் மூலம் வண்ணமூட்டினாலும் இயற்கையான நிறமுடைய முத்துக்களுக்கே சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குளத்தில் முத்துக்கள் வளர்ப்பு என்பது அறிவியல் ரீதியாக செய்யப்பட வேண்டியது. மிக நுட்பமான ஆழ்ந்த அறிவியல் ஞானமும், புரிதலும் அவசியம். ஏன், எதற்கு, எப்படி என புரியாமல் ஏனோதானோ என செய்ய இயலாது. இது ஒரு துல்லியமான விவசாய முறை. எளிய முறை போன்று தோன்றினாலும் தொழில்நுட்ப அறிவு மிக அத்தியாவசியம். வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டுமே போதுமானது அல்ல. மிக நீண்டகாலம் பொறுமையாக காத்திருக்கும் தொழில்நுட்பம். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காத்து இருக்க வேண்டும். இதர விவசாயம் போல வளர்ச்சி என்பதை தினசரி கண்ணால் பார்க்க இயலாது. மூடிய சிப்பிக்குள் வளரும் முத்துக்களுக்காக காத்திருக்கும் அசாத்திய பொறுமை வேண்டும்.
இயற்கையின் இந்த அரிய நிகழ்வை அறிவியலால் நெறிப்படுத்தி மனிதன் தொழில்நுட்பமாக வளர்த்தெடுக்க முடிந்தது. முத்துக்களை பல்வேறு வடிவிலான ஆபரணங்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுடன் இணைத்து பயன்படுத்துகின்றனர். முத்தை அணிவதால் உடலில் தட்பவெப்பம் சீராக இருக்கும். உடல்நலத்திற்கும் நல்லது என நம்புகின்றனர். சீனர்கள் முத்தின் பொடியை மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். முத்துக்களில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடல்நலத்தை நன்றாக வைத்து ஆயுளை அதிகரிக்கின்றது. முத்து சாப்பிடுவதால் IQ கூடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வருவாய் முத்துவினை பொடியாக்கி அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கின்றனர். முத்து சேர்த்த அழகு கிரீமை முகத்திற்கு தடவுவதால் முகம் மிகவும் இளமையாகும். இதிலுள்ள பயோ கெமிக்கல் முகத்தின் செல்கள் சிதைவடைவதைத் தடுக்கும். முத்து பொடி மருந்து சாப்பிடுவதனால் மன அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் குணமாகும். முத்து பொடியில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கால்சியம், மக்னீசியம், இரும்புசத்து, செலினியம், காப்பர், ஜிங்க், சிலிக்கான் போன்ற தாது பொருட்களும் பல வைட்டமின்களும் இதிலுள்ளது. இன்றைய காலகட்டத்தில் வேளாண்மை தொழில் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என கருதினால் இதுபோன்ற பண வரவுகளை அதிகரிக்க செய்யும், தொழில்நுட்பம் சார்ந்து, விற்பனை வாய்ப்பு உள்ள தொழில்களை செய்ய வேண்டும் என்பதற்கு எவ்வித மாற்றும் இல்லை.
What's Your Reaction?













