வறட்சியிலும் பலா சாகுபடியில் அசத்தல்... ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம் ஈட்டும் சிவகங்கை விவசாயி!

சிவகங்கை வறட்சிப் பகுதியில் இயற்கை முறையில் பலா சாகுபடி செய்து, ஏக்கருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார் விவசாயி ஆப்ரகாம். சரியான பராமரிப்பு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் பலா சாகுபடி நல்ல வருமானம் தருவதாக அவர் தெரிவிக்கிறார்.

Jul 3, 2026 - 18:00
வறட்சியிலும் பலா சாகுபடியில் அசத்தல்... ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம் ஈட்டும் சிவகங்கை விவசாயி!
மண்வாசனை

வெப்ப மண்டலமான தென்கிழக்கு ஆசியாவில் 17 அதிகமாக விளைவிக்கப்படும் பலாப்பழம், 'தமிழகத்தில் மலைப்பிரதேசங்களில் காணப்படு வதுதான் இயற்கை வழங்கிய கொடையாகும். அதிலும் வியப்பிற்குரிய அம்சமாக, மழைப்பொழிவு குறைவான சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை முறையில் பலாப்பழம் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் விவசாயி ஆப்ரகாம்.

வறட்சிப் பகுதியான சிவகங்கை மாவட்டம் கல்லுவழி கிராமத்தில் இயற்கை முறையில் பலாப்பழத்தை சாகுபடி செய்து, மக்களைக் குளிர்வித்து வரும் விவசாயி ஆப்ரகாமை சந்தித்துப் பேசினோம்.
 

சாகுபடி குறித்து விரிவாக கூறுங்களேன்..?

"ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம். வண்டல் செம்மண்ணில் பலா சிறப்பாக விளையும். ஆனால், நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும். நிலத்தை நன்றாக உழுது, பின்பு 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வெரு குழியிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75 சதவிகிதம் தொழு உரம் 15 சதவிகிதம், மண்புழு 5 சதவிகிதம், செம்மண் 5 சதவிகிதம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து குழியை நிரப்பி,லேசாக தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும். விதை முலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.

ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாவது ஆண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மூன்றாம் ஆண்டு. கடும் கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்தடுத்த பருவ ஆண்டுகளில் மழையே போதும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. பலா மரங்களுக்குத் தகுந்த தட்பவெப்பநிலை இருந்தால் அவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது. அவற்றுக்குப் போதுமான ஒளி மற்றும் வெப்பம் தேவை. ஓர் இளம் மரத்தின் வேர்கள் தடைபட்டிருந்தால், அவை தரையில் நடவு செய்தாலும் சாதாரணமாக வளராது.
ஒரு ஏக்கருக்கு சுமார் நூறு மரங்கள் வீதம் ஐம்பது ஏக்கரில் பலா மரம் வைத்திருக்கிறேன்.

மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் வருடம் ஒன்றுக்கு 50 கிலோ அளவு தொழு உரமும், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கலந்து நீர் பாய்ச்ச வேண்டும். உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒருமுறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும். செடிகள் வளரும் வரை சுளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டுக் கிளைகளை வெட்டிப் பராமரிக்க வேண்டும்.

விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காப்புக்கு வரும். ஆனால், ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்கத் தொடங்கும். காயில் உள்ள முள்ளை வெட்டிப் பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்போதுதான் அந்தக் காய் அறுவடைக்குத் தயாராகிவிட்டது என புரிந்து கொள்ளலாம். பால் போன்ற திரவம் வந்தால் அந்தக் காயைப் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம். ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பழங்களைப் பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு, மிளகு ஆகியவற்றைப் பயிரிடலாம். கூடுதல் வருவாய் கிடைக்க இவை உதவும்.

பராமரிப்பு மற்றும் பயன்கள்

இளம் பலா மரங்களில் நோய் தாக்கியது, சேதமடைந்தது அல்லது காய்ந்த பகுதிகளை அகற்றிவிட வேண்டும்.
முதிர்ந்த மரங்களில், செங்குத்தான கிளைகளை ஆண்டுதோறும் கத்தரிப்பதன் மூலம் பழங்களை அறுவடை செய்யக்கூடிய உயரத்தில் வைக்கலாம். இது செங்குத்து வளர்ச்சியை விட பக்கவாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும். காற்றின் ஓட்டத்தை மேம்படுத்தவும், மரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சூரியஒளி படுவதை உறுதி செய்யவும் மரம் முழுவதும் உள்ள சில பழைய கிளைகளை அகற்ற வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்த கிளைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அகற்ற கூடாது. பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக உண்ணலாம். கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு. பலா இலையின் கொழுந்தை அரைத்து தோல் நோய் மீது பூசினால் விரைவில் குணமாகும். நார்ச்சத்து அதிகமுள்ளதுடன் ஊட்டச்சத்து தேவையிருப்போரும் பலாப்பழத்தை அதிகமாக சுவைக்கலாம். வைட்டமின், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையைத் தடுக்க வல்லது.

பலாப்பிஞ்சை சமைத்து உண்டால் பித்தமும், நீர் வேட்கையும் நீங்கும். பலா இலையைக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதனை தேனில் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும். பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.

பழத்தின் வளர்ச்சி -விலை
கோடையின் நடுப்பகுதியில் மரத்தில் உள்ள பலாப்பழம் முதிர்ச்சியடைகின்றன. அவை சராசரியாக 10 முதல் 40 பவுண்டுகள் வரை இருக்கும். இருப்பினும் சில பழங்கள் 80 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் கூட எடை இருக்கும். ஒவ்வொரு மரத்திலும் சுமார் ஐந்நூறு பழங்கள் வரைக்கும் காய்க்கும். சில வருடங்கள் அது குறைவாகக் கூட இருக்கலாம். அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தில் இருந்து கீழே விழும் இலைகள், களைக்கொல்லி செடிகள் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக மறுசுழற்சி செய்து விடுவோம். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் மரங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதுவே நல்ல வளர்ச்சியாக இருக்கிறது.

நிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சம அளவில் ஈரமாக வைத்திருப்பது முக்கியம். கூடுதலாக, வெப்பநிலை குறைந்தால் அது வேர்களைச் சூடாக வைத்திருக்கும். பலா மரத்தில் பூச்சிகள் அல்லது நோய்களால் கடுமையான பிரச்னைகள் எழுவதில்லை. ஆனால், அதன் சுவையை ஏற்கெனவே ருசித்திருக்கும் வனவிலங்குகள் காட்டுக்குள் புகுந்து பழங்களைப் பறித்து சேதப்படுத்தலாம். அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் பழம் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும். அந்த நேரத்தில் அதன் தண்டுகளை வெட்டிப் பழத்தை எடுத்து விடுங்கள்.

விலை ஒரு கிலோ முப்பது முதல் நாற்பது ரூபாய் வரைக்கும் விற்பனை ஆகிறது. வேலை ஆட்கள் சம்பளம், இயற்கை உரம் மற்றும் நம் உழைப்புக்கான கூலி கழித்தால் கூட ஒரு ஏக்கரில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக்க முடியும். அது போக அரசாங்கம் மூலம் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் இருந்து கிடைக்கும் இயற்கை முறையிலான விவசாயம் செய்வதற்கான ஆலோசனைகள் பெரும் உதவியாக இருக்கிறது" என்கிறார்.
வறட்சிப் பகுதிகளிலும் பலா சாகுபடியில் லாபம் கொட்டும் என்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow