அமைச்சர் போட்டிருப்பது AI கண்ணாடியா? சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்!

தவெகவின் அமைச்சர் முகமது பர்வேஸ் அணிந்திருந்த கண்ணாடி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Sep 3, 2026 - 18:44
அமைச்சர் போட்டிருப்பது AI கண்ணாடியா? சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தவெகவின் அமைச்சர் பர்வேஸ் அணிந்திருக்கும் கண்ணாடி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்வேஸ், தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் பர்வேஸ் மெட்டா ஏஐ கண்ணாடி அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வந்ததாகக் கூறப்படும் நிகழ்வு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சட்டப்பேரவைக்குள் உயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து வந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

மேலும், இந்த நிகழ்வைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட மாற்றுக்கட்சித் தலைவர்கள், “சார்ட்டர்ட் பிளைட்டில் போறதும், பாட்டிக்கு கண்ணாடி போடுறதும் மக்கள் ஏற்கனவே பார்த்து சலித்துவிட்ட ரீல்ஸ் அரசியல்; அரசு விவசாயிகளையும் ஏழை மக்களையும் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என செய்தியாளர் சந்திப்பில் கிண்டலாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் பர்வேஸ் அணிந்திருந்த கண்ணாடி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடிதான். இதை அணிந்துகொண்டுதான் பேரவைக்கு செல்கிறேன். இதில் கேமரா இருப்பதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

மெட்டா ஏஐ கேமரா கொண்ட மூக்குக்கண்ணாடி மூலம் பேரவை நிகழ்வுகளைப் படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow