ஜாபர் சாதிக்கின் ஜகஜால வித்தை! ‘பவானி’ பாணியில் ‘மாஸ்டர்’ ஸ்கெட்ச்...
கல்லூரி மாணவர்களை கையில் போட்டுக்கொண்டு, ஜாபர் சாதிக் செய்த ஜாலவித்தைகள், கேட்கக் கேட்கக் கலங்கடிக்கின்றன
டெல்லியில் இருந்து பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க போதை பொருளை கடத்திய வழக்கில் கைதாகி, தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதை மன்னன் ஜாபர் சாதிக், எப்படித் தன் போதைப் பொருட்களை புழக்கத்தில் விட்டார் என்பதை, அமலாக்கத்துறை துருவிக் கண்டுபிடித்திருக்கிறது. கல்லூரி மாணவர்களை கையில் போட்டுக்கொண்டு, ஜாபர் சாதிக் செய்த ஜாலவித்தைகள், கேட்கக் கேட்கக் கலங்கடிக்கின்றன.
தமிழ்நாட்டில், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணம் அறியாத காவல்துறை, பல்வேறு ஆபரேஷன்களை ஏற்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது. ஆனால், ஜாபர் சாதிக் என்ற போதை மன்னன் கைதாகும்வரை, அது கட்டுப்படுத்த முடியாமல்தான் இருந்தது. பல நாடுகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக கண்டறியப்பட்ட நிலையில், ஜாபர் சாதிக் எப்படி தனது போதைப்பொருள் சந்தையை ஆபரேட் செய்தார் என்று ஆராயத் தொடங்கியது அமலாக்கத்துறை. அதோடு, மாணவர்கள் கையில் எப்படி போதைப் பொருட்கள் வந்தன என்றும் துருவ, இரண்டுக்கும் இருந்த லிங்க் கிடைத்திருக்கிறது.
விக்ரம் திரைப்படத்தில் வருவதுபோல, போதை வஸ்துகளின் மூலப் பொருட்களை கடத்தும் சந்தானம்தான் இந்த ஜாபர் சாதிக் என்று நினைத்தால், அதை ஆபரேட் செய்ய, இவர் மாஸ்டர் படத்தில் வரும் பவானியின் பாணியைப் பின்பற்றியிருப்பது, பெரும் அதிர்ச்சித் தகவலாய் இறங்கியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கைதானதும், அந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருக்குமோ என அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அது தொடர்பாக ஜாபர் சாதிக்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டபோதுதான், அவருடன் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்பில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரித்துப் பார்த்ததில், ஜாபர் சாதிக் சில கல்லூரிகளில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து உதவி செய்திருக்கிறார் என்றும், அதற்கு கைமாறாக, அந்த மாணவர்களையே தன் போதைப் பொருட்களின் சேல்ஸ் ஏஜெண்டுகளாக பயன்படுத்தி இருக்கிறார் என்ற திடுக்கிட வைக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. மாணவர்களை காசு கொடுத்து வெற்றி பெற வைத்துவிட்டு, அவர்கள் நடத்திய வெற்றிப் பார்டிகளுக்கும் போதை பொருள் சப்ளை செய்து, தமது ‘மாஸ்டர்’ பிளானை அரங்கேற்றியிருக்கிறார் ஜாபர் சாதிக். இதெல்லாம் அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகி, அசரடித்திருக்கும் நிலையில், இது வெறும் டிரெய்லர் தான் என்கிறது அமலாக்கத்துறை வட்டாரம். இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
ட்ரெய்லரே இப்படி இருக்கையில், ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க் குறித்த முழு விவரம் வெளியாகும்போது, என்னென்ன பேரதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ ??
What's Your Reaction?