”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள்

போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் - அவை பூமியை ஒழித்துவிடும் எனவும், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர் எனவும் எச்சாரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

Sep 22, 2024 - 10:14
”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள்


போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் - அவை பூமியை ஒழித்துவிடும் எனவும், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர் எனவும் எச்சாரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

மேலும், அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் அசாதாரண சூழல், சிரியாவில் நடக்கும் சோகம் என உலக நாடுகளில் போர் சூழல் நிலவிவருகிறது. இதனால், அப்பாவி மக்கள் அனைவரும் கடும் நெருக்கடிக்கும், அச்சுறுதலுக்கும் ஆளாகிவருகின்றனர். என்னதான் ஐ.நா சபையே குறிக்கிட்டு போரை நிறுத்தச்சொன்னாலும், போர் ஏதும் முற்றுப்பெறவில்லை. இப்படி உலக நாடுகளில் நிலவி வரும் இச்சூழல் குறித்து தற்போது  எச்சரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் - அவை பூமியை ஒழித்துவிடும். மத்திய கிழக்கிலும் - உக்ரைன் - ரஷ்யாவிலும் வெடிக்கும் வெடிகளின் புகைநெடி உலகக் காற்றில் மரணவாசனை கலந்துபோகிறது. லெபனானின் பெய்ரூட் நகரத்தில் பேஜர்கள் வெடித்ததில் ஐஸ்கிரீமில் ரத்தம் வடிகிறது. போர் உத்திகளில் இது ஒரு மோசமான முன்னெடுப்பு. உலக மனிதர்கள் கையாளும் 7.2பில்லியன் கைபேசிகளும் வெடிகுண்டுகளாகும். விபரீதம் நேர்ந்தால் இந்த பூமிஎனும் சிறுகோளைக் கடவுளும் காப்பாற்ற முடியாது; கடவுளையும் காப்பாற்ற முடியாது.”

“தண்ணீரில் பிறந்த மீன் தண்ணீரிலேயே குழம்பாவது மாதிரி, தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம் தொழில்நுட்பத்தாலேயே அழியப் போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர். காற்று ஆள்தேடி அலையும்; சுவாசிக்க நாசி இருக்காது. மில்லி மீட்டர், மில்லி மீட்டராக ஏறிய நாகரிகம் மீட்டர் மீட்டராகச் சறுக்கி அழியும். இந்த நிலையில் அமெரிக்கத் துருப்புகள் தங்கள் பீரங்கிகளை ஈரானின் எண்ணெய்க் கிணறுகளை நோக்கித் திருப்பத் துடிப்பது ஏசுவுக்கே ஏற்புடையதாக இருக்காது உலக நாடுகளே! அருள்கூர்ந்து காலநேரத்தோடு கவலைப்படுங்கள். கோடிக்கணக்கான குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா? போர்களை நிறுத்துங்கள். இது உலகை நேசிப்பவனின் ஒற்றைக் குரல்" என பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow