ஜோபைடன் பேச்ச எல்லாம் கேக்க முடியாது.. "ரஃபாவில் தாக்குதலை தீவிரப்படுத்துவோம்" - நேதன்யாகு
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் அறிவுறுத்தலை புறக்கணித்து காசாவின் ரஃபா எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில், 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 18,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்டு 30,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆதரவளித்து வந்த நிலையில், இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாக அவரே குற்றம்சாட்டினார். லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரஃபா நகரில் இஸ்ரேல் படை தாக்குதலை நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அக்டோபர் 7 சம்பவம் மீண்டும் நடைபெறாது எனவும், தங்களுக்கு எது சிவப்புக்கோடு என தெரியும் எனவும் ஜோபைடனை மறைமுகமாக சாடி கருத்து தெரிவித்துள்ளார். 1,100 பேருக்கும் மேல் உயிர் பலி வாங்கிய ஹமாசுக்கு நியாயமான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும் அரபு நாடுகளின் பெயரை குறப்பிடாமல், தங்களுக்கு பல நாடுகளின் தலைவர்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார். ஹமாஸ் பயங்கரவாதிகளில் முக்கால்வாசியை அழித்து விட்டதாகவும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நான்கு முதல் 6 வாரங்களுக்குள் போர் முடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
What's Your Reaction?