சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டி பட்டதாரி இளைஞர்களை கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் கிரைம் அடிமைகளாக கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் இந்தியர்கள் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்ட நிலையில், தமிழகத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் மாட்டிக்கொண்டனர். இதில் சிக்கிக்கொண்ட பல தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி மற்றும் டிராவல் ஏஜென்சி மூலமாக பலரும் அனுப்பப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மூலம் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாக அங்கீகாரம் இல்லாமல் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி மற்றும் டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் தொடர்பாக புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சென்னை காவல்துறை உதவியுடன் சுமார் 18 நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் அடிமைகளாக மட்டுமல்லாது வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விவகாரம் தொடர்பாகவும், மோசடி செய்த கன்சல்டன்சி மற்றும் ட்ராவல் ஏஜென்சி நிறுவனங்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்கள், கணினிகள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் சோதனையின்போது பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலர்களை விசாரணைக்காக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து தொடர்புடைய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவானதால் அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இதில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் குறித்து விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 9 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணையில் பல நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக பல ஊழியர்கள் அழைத்து வரப்பட்டதால் அவர்கள் தரப்பில் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இதையடுத்து விசாரிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் விசாரணைக்கு வரும் 27ம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த திடீர் சோதனையால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.