பொங்கல் ரொக்க பணம் எவ்வளவு? கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் அவசர ஆலோசனை
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பரிசுதொகுப்பு, ரொக்க பணம் எவ்வளவு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில், அரிசி அட்டைதாரர்கள் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் கிடைக்கும். ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கி வாக்காளர்களை குஷிப்படுத்த திமுக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஏற்படும், கூடுதலாக ரொக்கப் பணம் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என குடும்ப அட்டைதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
What's Your Reaction?

