இது என்ன உங்க அவெஞ்சர்ஸா? அமெரிக்காவிலும் கூலி படத்திற்கு எகிறும் ஹைப்!
அமெரிக்காவில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பினை கண்டு, இது என்ன உங்க அவெஞ்சர்ஸா? என வியப்பில் ஆழ்ந்துள்ளார் ஒரு எக்ஸ் பயனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் முந்தியடித்து டிக்கெட் புக் செய்து வருகிறார்கள்.
படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்காவில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூலி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினை கண்டு, எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பயனர், “இந்தியாவிலிருந்து யாராவது இதனை விளக்குங்கள். மிகப்பெரிய தியேட்டரில் 5 நாட்களில் கூலி படத்திற்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 30 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. இது உங்கள் அவெஞ்சர்ஸ் படமா?” என பதிவிட்டுள்ளார்.
அதற்கு இந்தியாவிலுள்ள நபர்களும், ரஜினி ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு பயனர், “ரஜினி இந்தியாவின் சூப்பர் ஸ்டார். அவருக்கு 75 வயது. இயக்குநர் இதற்கு முன்பு இயக்கிய 5 படங்களும் ப்ளாக்பஸ்டர். இரண்டு பேரும் கைக்கோர்த்து இருப்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு அமெரிக்க வாழ் இந்தியர் தனது ரிப்ளைவில், “நாங்கள் 600 டிக்கெட்களை புக் செய்துள்ளோம். 3 தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சிக்கு. 800 பேர் டிக்கெட் வேண்டும் என கேட்டிருந்த நிலையில் 600 டிக்கெட் தான் கிடைத்தது. ஆகஸ்ட் 13 திரையரங்கு வந்து பாருங்கள், எங்களது கொண்டாட்டத்தை” என குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு ரசிகர்களின் ரிப்ளையினை கண்டு, “இப்போது புரிகிறது ஏன் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு என்று. டிக்கெட் விலை 3 மடங்கு அதிகம், மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில். அதனால் தான், எனக்கு இது என்ன மாதிரியான படம், ஏன் இவ்வளவு ஹைப் என கேட்கத் தோன்றியது” என பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு தொடங்கிய அனைத்து மாநிலங்களிலும், டிக்கெட் முன்பதிவு ஜெட் வேகத்தில் செல்கிறது. பெங்களூரு மாநகரில் நேற்று காலை ஆரம்பமான கூலி படத்திற்கான முன்பதிவில் அதிகபட்சமாக டிக்கெட் கட்டணம் ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஸ்வாகத் ஷங்கர்நாக் தியேட்டரில் அதிகாலை 6:30 காட்சிக்கான டிக்கெட் கட்டணம் 2000 ரூபாயாக உள்ளது. அதற்கடுத்து 1500, 1000 ரூபாயில் டிக்கெட் உள்ளது. இருப்பினும், ரசிகர்கள் அனைத்து டிக்கெட்களையும் வாங்கிவிட்டனர். கர்நாடகவில் மட்டும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 37 நிமிடங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகவில் டிக்கெட் முன்பதிவில் கே.ஜி.எப் 2 மற்றும் லியோ படங்களின் சாதனையினை கூலி படம் முறியடித்துள்ளது. தற்போதைய டிக்கெட் முன்பதிவின் அடிப்படையில் படத்தில் முதல் நாள் வசூலே 50 கோடிக்கு மேல் செல்லும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்களும், டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போதைய டிக்கெட் முன்பதிவிலும் அசத்தி வருகிறது கூலி திரைப்படம்.
What's Your Reaction?






