Priya varrier: மணிரத்னம் படத்தில் நடிக்க பேராசை.. பிரியா வாரியார் ஓபன் டாக்!
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு ஆடிய நடனத்தின் மூலம் மீண்டும் இளைஞர்களின் தேடலில் வந்துள்ள பிரியா வாரியார் குமுதம் இதழுக்காக வழங்கிய எக்ஸ்கூளூசிவ் நேர்காணல் விவரம்.

ஒரு அடார் லவ் மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் ப்ரியா வாரியர். அந்தப் படத்தில் அவர் குறும்பாகக் கண்ணடிப்பது போன்ற ஒரு காட்சியின் மூலம் 2018-ல் இந்திய மக்கள் கூகுளில் அதிகம் தேடிய நபராக மாறியவர். தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பாக நடித் துள்ள அவரை, ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்..
உங்களுடைய முதல் படம் வெளியாகும் முன்பே, நீங்கள் கண்ணடித்த வீடியோ வைரல் ஆகியிருந்தது. உங்களுடைய துறையில் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது?
“சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எல்லோரும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். புதுமுகத்திற்கு இந்த அளவுக்கு பெரும்பான்மையான அங்கீகாரம் கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயம். இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு கிடைக்க வேண்டியது, எனக்கு அந்த ஒரு தருணத்தில் கிடைத்ததை நான் சிறந்ததாகக் கருதுகிறேன்.’’
நீங்கள் கண்ணடிக்கும் வீடியோ இந்த அளவிற்கு வைரலாகும் என்று நினைத்தீர்களா?
“நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அந்த வீடியோ வெளியாகும்போது எனக்கு மிகவும் இளம் வயது. அந்த சமயத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு விவேகம் எனக்குக் கிடையாது . ஆகையால் , எதிர்பாராத விதமாகத்தான் அது நடந்தது.’’
நீங்கள் ஒரு படத்தைத் தேர்வு செய்வதற்கு என்னென்ன விதிகள் வைத்திருக்கிறீர்கள்?
“அப்படி எதுவும் நான் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், கதை எனக்கு பிடித்திருந்தால் ஒப்புக்கொள்வேன். மேலும், ஒரு வலிமையான இயக்குநர், வலிமையான கதை, வலிமையான கதாபாத்திரம், வலிமையான தயாரிப்பு நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றாவது, நான் ஒப்புக்கொள்ள அதில் இருக்க வேண்டும்.’’
நீங்கள் பல மொழிகளிலும் நடித்து வருகிறீர்கள். அது உங்களுடைய வளர்ச்சிக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது?
“பல வகைகளில் எனக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, இன்றைக்கு ஓடிடி தளத்தில் படம் பார்ப்பதற்கு மக்கள் விரும்புகிறார்கள். திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்க முடியாத நேரத்தில் மக்கள் ஓடிடி தளத்தைதான் நாடுகிறார்கள். அந்த சமயத்தில் மொழி தடையாக இல்லாமல் இருப்பது மிகச் சிறந்த விஷயம்தானே.’’
’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்கள்?
“அந்தப் படத்தில் என்னை ஏ ன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தில் எல்லாருமே மிகப்பெரிய கலைஞர்கள். நான் மட்டும்தான் புதிய முகம். ஆனால், அனைவருமே இனிமையாகப் பழகுவார்கள். நல்ல வசதியான சூழலை எ ன க் கு அமைத்துக் கொடுத்தார்கள் . ஒவ்வொருவரிடமும் நேரங்களைக் கழித்தது இனிமையாக இருந்தது. அவை எல்லாம் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் தான்.’
உங்களுக்கு யாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை?
“மம்முக்காகூட நடிக்க வேண்டும் என்று ஆசை. தமிழில் விஜய் சாரோட நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் என்னுடைய ஆசையை நான் வெளிப்படுத்துகிறேன்.
‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’பாடலைப் பார்த்துவிட்டு சிம்ரன் என்ன சொன்னார்கள்?
“இன்ஸ்டாகிராமில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று செய்தி அனுப்பினார்.’’
உங்களுடைய அபிமான இயக்குநரைப் பற்றி?
“ஆம். என் அபிமான இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பேராசை.’’
உங்களுடைய ஃபிட்னஸ் ரகசியம்?
“அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. நான் மிகப்பெரிய உணவுப் பிரியை. என்னுடைய பரம்பரை காரணமாக நான் ஆரம்பத்திலிருந்து இப்படியேதான் இருக்கிறேன்.’’
உங்கள் முதல் படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தபோது ரசிகர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
“முதல் நாள் முதல் காட்சியை நான் திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். அந்தப் படத்தில் முதலில் நான் அம்பு விடுவது போல காட்சி இருக்கும். ஆனால். அந்தப் பாடலில் நான் தோன்றுவேன் என்று யாரும் எதிர்பார்க்காத திருப்பம். என்னைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அனுபவம் எனக்கு முதல் காட்சியில் மட்டுமே கிடைத்தது. அடுத்த காட்சியின்போது இந்தப் படத்தின் பாடல் வெளியாகி விட்டதால் ஏதோ ஓர் இடத்தில் நான் தோன்றுவேன் என்று தெரிந்தது.’’
What's Your Reaction?






