புதுச்சேரி: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கொந்தளிப்பு
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் - நடிகர் விஜய்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மழலை முகம் மாறாத சிறுமியையும், அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்". என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனித குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கிறது. மகளைப் பறிகொடுத்து மீளமுடியாத துயரில் தவிக்கும் பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" எனவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது. இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும். அதுவே இதுபோன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும்" என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அச்சிறுமி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம். இந்தக் கொடுமைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்". எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?