சிவனை பார்க்க முடியாமல் தவிக்கும் நந்தி.. ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நந்திக்கும் மூலவருக்கும் இடையே வைக்கப்பட்டுள்ள உண்டியலை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக் கடலில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோயிலில் ராமநாத சுவாமி சந்நிதிக்கும் நந்திக்கும் இடையே கோயில் நிர்வாகம் தரப்பில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால், நந்தி சிலை மூலவரைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உண்டியலை அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவிடக் கோரி திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சைவ விதிகளின்படி கோயிலில் சிவனை பார்த்து இருக்கும் வகையில் நந்தி சிலை வைக்கப்படும். ஆனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவருக்கும் நந்தி சிலைக்கும் இடையே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே , உண்டியலை அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமநாத சுவாமிக்கும் நந்திக்கும் இடையே எவ்வளவு நாளாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர். மேலும், மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?