தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? அரசிதழில் வெளியிட்ட தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே, முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட பலரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முழுமையான தகவல்களை அளிக்காத சுயேட்சை வேட்பாளர்கள் பலரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னர் மார்ச் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதிலும் பலர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதனையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது, தொகுதி வாரியாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என்ற அடிப்படையில், இறுதி வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளரின் பெயர், முகவரி, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்ட தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
What's Your Reaction?