Vaibhav Suryavanshi: ஒரே நாளில் 6 சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கெதிராக சதம் விளாசி முன்னணி வீரர்களின் பாரட்டுகளைப் பெற்றுள்ளார்.

Apr 29, 2025 - 11:22
Vaibhav Suryavanshi: ஒரே நாளில் 6 சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி
Vaibhav Suryavanshi in RR

ஐபிஎல் தொடர் ஏன், மற்ற லீக் தொடர்களிலிருந்து வேறுபட்டு உள்ளது என்பதற்கு நேற்று பதில் கிடைத்திருக்கும். 14 வயதான சிறுவன் களத்தில் இறங்கி, சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்த காட்சி உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இம்பெக்ட் ப்ளேயராக களமிறங்கினார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே மூன்று சாதனைகளை படைத்தார்.

முதல் போட்டியில் செய்த மூன்று சாதனைகள்:

1. 2008 இல் தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை, மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 மட்டுமே (14 வயது 23 நாட்கள்).இதன் மூலம் 2019-ல் 16 வயது 157 நாட்களில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரயாஸ் ரே பர்மனின் சாதனையை சூரியவன்ஷி முறியடித்தார்.

2. ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றார். இந்த சாதனையை ஆர்ஆர் அணிக்காக விளையாடும் ரியான் பராக் வைத்திருந்தார். பராக் ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்த போது, அவருக்கு 17 வயது 161 நாட்கள்

3. ஐபிஎல்லில் பவுண்டரி அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றுள்ளார். பிரயாஸ் ரே பர்மன் இந்த சாதனையை ஆறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார்.

35 பந்தில் சதம்:

தான் விளையாடிய முதல் போட்டியில் கவனம் ஈர்த்த சூர்யவன்ஷி, நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் குவித்தது. 210 என்ற இமலாய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், வைபவ் குஜராத் அணியின் பந்துவீச்சினை அலட்சியமாக விளாசித் தள்ளினர். முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் என சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பந்துகளை சூர்யவன்ஷி எதிர்க்கொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒருபுறம் ஜெய்ஸ்வால் நங்கூரம் போல் நின்று சப்போர்ட் செய்ய, மறுபுறம் நான்- ஸ்டாப் வான வேடிக்கையினை காட்டத் தொடங்கினார் வைபவ் சூர்யவன்ஷி.

17 பந்தில் அரைசதம் கடந்த வைபவ், 35 பந்தில் சதம் விளாசினார். வீல் சேரில் அமர்ந்திருந்த டிராவிட் எழுந்து நின்று வைபவ் சதமடித்த தருணத்தை பாரட்டினார். அதிரடியாக ஆடி வந்த வைபவ் 38 பந்தில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்களும் அடங்கும். வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் 15.5 ஓவரில் 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்.

நேற்று வைபவ் செய்த சாதனைகள்:

1. டி20 வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் (வயது: 14 வருடம், 32 நாட்கள்)
2. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இரண்டாவது வீரர் (35 பந்துகள்)
3. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இந்திய வீரர் (35 பந்துகள்)
4. ஐபில் தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் (11 சிக்ஸர்)
5. அடித்த ரன்களில் அதிகப்பட்ச பவுண்டரி சதவீதம் (93 %)
6. ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்

இளம் வீரர் வைபவ் நிகழ்த்திய சாதனைக்கு இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சச்சின், ரோகித், ஹர்திக் பாண்டியா, சூர்யக்குமார் யாதவ் போன்றோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow