மிர்ச்சி சிவாவின் ”சுமோ” திரைவிமர்சனம்- படம் என்றால் லாஜிக் எல்லாம் இருக்கணுமா?
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையளத்தை உருவாக்கியவர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் பெரும் போராட்டத்திற்கு பிறகு திரையில் வெளியாகியுள்ள சுமோ திரைப்படத்திற்கான குமுதம் விமர்சனம் காண்க.

பீச் ஓரத்தில் சர்ஃபிங் கிளப்பும், ரெஸ்டாரன்டும் நடத்தும் வி.டி.வி.கணேஷின் காரில் ஒரு மர்மப் பெட்டி இருக்கிறது. வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காமெடியன் சதீஷிடம், வி.டி.வி.கணேஷ் பெட்டியை ஓபன் பண்ணுவதற்கு பதில் அதன் பின்னணியில் இருக்கும் ஒரு கதையை ஓபன் பண்ணுகிறார். அது சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜப்பானின் சுமோ வீரனில் ஆரம்பித்து, அவன் திரும்பவும் ஜப்பானுக்கு எப்படி செல்கிறான் என்பதில் முடிவடைகிறது.
அதற்குப் பின்னும் அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது போலீஸுக்கும் தெரியவில்லை, ஆடியன்ஸுக்கும் தெரியவில்லை. எண்ட் கார்டு போடும்போதுதான் சொல்கிறார்கள்..அதைச் சொல்லி விட்டால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும்.
சிவா நடித்து, பல வருடப் போராட்டத்திற்குப் பின் வெளி வந்திருக்கும் படம். ஜப்பானின் பிரபல சுமோ வீரரைப் பற்றிய படம் என்பதால், சிவாவின் வழக்கமான காமெடிகள் இரண்டாம் பட்சம்தான். ஆனால், சீரியஸாக ஃபைட் பண்ணுகிறார். அவருக்கு ஜோடி பிரியா ஆனந்த். நன்றாக நடித்துள்ளார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் ஏரியா அரசியல்வாதியாக வரும் யோகிபாபு காமெடி பரவாயில்லை ரகம்தான். நிழல்கள் ரவியும் இருக்கிறார்.
ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகளில் ஒளிப்பதிவு பிரமாதம். நிவாஸ்.கே.பிரசன்னாவின் பின்னணி இசைதான் ரொம்ப சுமாரான திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கிறது. காட்சிகள் ஒன்றில்கூட அழுத்தமோ, லாஜிக்கோ இல்லை. இயக்கம் ஹோசிமின்... சுமோ வீரரின் குழந்தைத்தனமான முகத்தைத் தவிர பார்க்க ஒன்றுமில்லை.
What's Your Reaction?






